ஆனந்தமளிக்கும் ஆனந்தாசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 24
எண்ணற்ற யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு பெயருண்டு. அந்த பெயருக்கு ஏற்ற பலனும் உண்டு. அந்த வகையில் ஆனந்தாசனம் என்ற ஒரு ஆசனத்தையும், அதன் மகிமையை பற்றியும் காண்போம்.
உடலில் ஆனந்தம் வேண்டுமெனில் உடலில் இயங்கும் பிராணன் சரியாக இயங்க வேண்டும்.
மனித உடலில் 72,000 நாடிகள் உள்ளன. இவை இடா, பிங்களா, சுஷ்ம்னா என்ற மூன்று முக்கிய நாடிகள் மூலமாகவே செயல்படுகிறது.
இடது நாசி மூச்சு, வலது பக்க மூளை மற்றும் இடது உடல்பாக இயக்கத்துக்கு ஆதாரமாக உள்ளது. இது உடலுக்குத் தேவையான குளிர்ச்சியையும், மனோ சக்தியையும் தருகின்றது. எனவே இதனை சந்திர நாடி என்று அழைப்பர்.
வலது நாசி மூச்சு இடப்பக்க மூளை மற்றும் வலது உடல்பாக இயக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தையும், பிராண சக்தியையும் அளிக்கின்றது. எனவே இதனை சூரிய நாடி என்று அழைக்கின்றோம்.
நரம்பு மண்டலத்தில் 1300 கோடி நரம்பு செல்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் கோடி செல்கள் மூளையில் உள்ளன. மனிதனின் இருதயத்திலிருந்து சுத்த ரத்தத்துடன் கலந்து வரும் பிராண வாயுவில் 20 சதவீதத்தை மூளையே பயன்படுத்திக் கொள்கிறது. பிராண வாயு கிடைக்காமற் போனால் மூளை செல்கள் இறந்து விடும். மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 700 மில்லி தூய ரத்தமும், பிராண சக்தியும் தேவைப்படுகின்றது.
எதற்காக இதை தெரிவிக்கிறேன் என்றால் மனித உடலுக்கு, குறிப்பாக மூளைக்கு பிராண சக்தி தேவைப்படுவதை உணர வேண்டும். அதற்கு நமது வலது நாசி, இடது நாசி அடைப்பில்லாமல் சீராக இருந்தால் தான் பிராண ஓட்டம் சரியாக இருக்கும்.
எத்தனை மனிதர்களுக்கு ஒரு நாசித்துவாரமும் அடைப்பில்லாமல் இருக்கின்றது. சிலருக்கு இடது நாசியில் அடைப்பிருக்கும். சிலருக்கு வலது நாசியில் அடிக்கடி அடைப்பிருக்கும். இன்னும் சிலருக்கு இரு நாசிகளிலுமே அடைப்பு இருக்கும். இதனால் உடலில் பிராண சக்தி சீராக இல்லாமல் பிரச்சனைகள் வரும்.
கவலை வேண்டாம், நமது உடலில் இருநாசி அடைப்பையும் நீக்கி சரியான முறையில் சுவாச ஓட்டத்தை நிகழ்த்தும் ஓர் ஆசனம் தான் ஆனந்தாசனமாகும். இந்த ஆசனத்தை செய்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும். பிராண சக்தி உடல் முழுவதும் சிறப்பாக இயங்குவதை நீங்கள் ஆச்சரியத்துடன் உணர்வீர்கள்.
உடலில் உள்ள இரு நாசித்துவாரமும் அடைப்பு இல்லாமல் சுவாசம் சீராக அதன் வழி இயங்கினால் நமது உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நல்ல பிராண சக்தி பெற்று சிறப்பாக இயங்கும். அந்த வகையில் நம் உடல் உள் உறுப்புகளுக்கும், குறிப்பாக மூளைக்கும் நல்ல பிராண சக்தி கிடைத்தால் உடலும், மனமும் ஆனந்தமாக இருக்கும். அதனால் தான் இது ஆனந்தாசனம் என்று அழைக்கப்படுகின்றது.
ஆனந்தாசனம் செய்முறை:
- தரையில் விரிப்பு விரித்து முதலில் நேராகப் படுக்கவும்.
- இடது பக்கம் திரும்பவும்.
- இடது கையை இடது கன்னத்தில் வைத்து முட்டியை தரையில் வைத்து தலையை உயர்த்தவும்.
- வலது காலை நன்றாக மேலே உயர்த்தவும்.
- வலது கையினால் வலது கால் பெருவிரலைப் பிடிக்கவும்.
- தலையும், கண்களும் இடது பக்கம் பார்த்தாற்போல் இருக்கவும்.
- பின் மெதுவாக காலை கீழே வைத்து கையை எடுத்து நேராகப் படுக்கவும்.
- இதேபோல் கால் மாற்றி வலது பக்கம் திரும்பி இடது காலை உயர்த்தி இடது கையினால் இடது கால் பிடித்து ஒருமுறை செய்யவும்.
- நாசி அடைப்பை விரைவில் சரி செய்யும்
- உங்களுக்கு வலது நாசி அடைப்பு இருந்தால் இடது பக்கம் திரும்பி ஒரு நிமிடம் இந்த ஆசனத்தை செய்து பாருங்கள். உடன் வலது நாசி அடைப்பு சரியாகிவிடும்.
- இடது நாசியில் அடைப்பு இருந்தால் வலது பக்கம் திரும்பி ஒரு நிமிடம் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுங்கள், உடன் இடது நாசி அடைப்பு நீங்குவதைக் கண்டு மகிழலாம்.
- இரண்டு நாசிகளும் அடைப்பிருந்தால் வலப்பக்கம், இடப்பக்கம் இரு புறமும் ஒரு நிமிடம் செய்யுங்கள். உடனே நாசி அடைப்பு நீங்கிவிடும்.
மூக்கடைப்பினால் தான் எல்லா வியாதியும் வருகின்றது. இதை நிறைய பேர் அலட்சியம் செய்கின்றனர். இதன் விளைவு நுரையீரல பாதிப்பு, இருதயம் பாதிப்பு வரை செல்கிறது. உடலில் வலப்பகுதி உறுப்புகளை இடது நாசி மூச்சுதான் ஆளுமை புரிகின்றது.
மனிதனுக்கு இரு நாசிகளும் சரியாக இயங்கினால் உடலியக்கம் முழுவதும் நன்றாக இருக்கும். மனதின் இயக்கமும் நன்றாகயிருக்கும். உடலும், மனமும் நலமானால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தானே!
சாப்பிடாமல் பலநாள் இருக்கலாம். தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்கலாம். ஆனால் உடலில் மூச்சு இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது. அப்படிப்பட்ட மூச்சை சிறப்பாக இரு நாசித் துவாரத்தின் வழியே சரியாக அடைப்பு இல்லாமல் இயங்கச் செய்வது தான் சிறந்த வாழ்க்கை. அது இந்த ஆனந்தாசனம் பயில்வதினால் சாத்தியமாகும். எனவே வாழ்வில் ஆனந்தத்தை தேடுபவர்கள் அனைவரும் இந்த ஆசனத்தை அவசியம் பழகுங்கள்.
இவ்வாசனத்தின் இதர பலன்கள்:
- மனித உடலின் இயக்கத்திற்கு முழு ஆதாரமான மூச்சோட்டத்தை வலது, இடது நாசியில் அடைப்பு இல்லாமல் சரியாக இயங்கச் செய்கிறது.
- உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிராண சக்தி கிடைக்கின்றது.
- இடுப்பு சதைகள் இறுக்கமாகின்றது. அதிக தசை குறைந்து கட்டுக்கோப்பாக அழகாக இருக்கச் செய்ய உதவுகின்றது.
- மூலத்திற்கு குணமளிக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
- நுரையீரல், இருதயம் பலம் பெறுகின்றது.
- நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
- ஆண், பெண் பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டம் நன்கு பாய்கின்றது. அரிப்புகள் நீங்கும்.
- பெண்கள் இளமைப் பருவத்திலேயே பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும். என்றும் இளமையுடன் இருக்கலாம்.
- கழுத்து வலி நீங்கும்.
- உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்
ஆனந்தாசனம் செய்து கொண்டு வாரம் ஒரு நாள் காலை, மாலை வெள்ளரிக்காய், பச்சை கேரட், தக்காளி பழம் ஒரு கப் சாப்பிடுங்கள். மதியம் மட்டும் உணவு (அரிசி சோறு) சாப்பாடு எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு வாரம் இரு நாட்கள் இரவு உணவிற்குப் பதில் வெள்ளரிக்காய், தக்காளிப்பழம் ஒரு கப் சாப்பிடுங்கள்.
பின்பு தினமும் காலை, மதியம் சாதாரண சாப்பாடு எடுத்துக் கொண்டு இரவு மட்டும் அரைமூடி தேங்காயும் இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்கள். அதிக சதை நீங்கும். உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். என்றும் சுறுசுறுப்பாக இளமையுடன் ஆனந்தமாக வாழலாம்.
அற்புத பலன் தரும் அபான முத்திரை
மனிதனின் ஆரோக்கியம் அவனது உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறினால் போதும்.
மனித உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேற வேண்டும். 1. வியர்வையாக 2. சிறுநீராக 3. மலமாக 4. கார்பன் – டை – ஆக்சைடாக (கரியமில வாயு). யாருடைய உடலில் மேற்கூறிய நான்கு வழிகள் மூலம் கழிவுகள் வெளியேறுகின்றதோ அவர்களுக்கு ஆரோக்கியம் இருக்கும். யாருடைய உடலில் இந்தக் கழிவுகள் வெளியேறாமல் உள்ளதோ அவர்களுக்கு நோய் ஏற்படும்.
அபான முத்திரை
- நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இருநாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- பின் மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியைத் தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.
- மற்ற விரல்கள் நேராக இருக்கவும்.
- இந்த நிலையில் இரு கைகளையும் வைத்து 15 நிமிடங்கள் இருக்கவும்.
- பின் படிப்படியாக 10 நிமிடங்கள், பின்பு இரு மாதத்தில் 15 நிமிடங்கள் இருக்கலாம்.
இந்த முத்திரை மூலம் படிப்படியாக மலச்சிக்கல் நீங்கும். கழிவுகள் வெளியேறும்.
முத்திரையுடன் சேர்த்து உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். உண்ணும் உணவை நன்கு பற்களில் வைத்து அரைத்து கூழாக்கி உண்ண வேண்டும். இதை அனைவரும் பொதுவாகக் கடைப்பிடிப்பதில்லை.
உண்ணும் பொழுது பேசக்கூடாது. கவனம் உணவில் மட்டும் இருக்க வேண்டும்.
பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும். சாத்வீகமான உணவுகளான பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளவும்.