ஆரோக்கியம் தரும் அதோமுக சவனாசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 29
ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது மனம் ஆரோக்கியம் + உடல் ஆரோக்கியம் – முழுமையான ஆரோக்கியம் எனப்படும்.
மனதில் பயம் இருக்கக்கூடாது. சந்தேகம் இருக்கக்கூடாது. கவலை, டென்ஷன், கோபம், மன இறுக்கம் இருக்கக்கூடாது. பொறாமை இருக்கக்கூடாது. மனதில் மகிழ்ச்சி, உற்சாகம், அன்பு, அமைதியிருக்க வேண்டும். இருந்தால் மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் என்று அர்த்தம்.
இதைக் கேட்டவுடன் இப்படிப்பட்ட மனிதர் உலகில் இருவர் தான் சார் இருக்க முடியும் என்று என் நண்பர் கூறினார். யார் என்றேன்.
ஒருவர் இறந்து விட்டார்.
ஒருவர் பிறக்கவில்லை என்றார்.
ஆம். இன்று மனிதர்களின் மனநிலை எப்படியுள்ளது. குழந்தை பிறந்துள்ளது. அந்த ஒரு நொடி தான் எனக்கு குழந்தை பிறந்துள்ளது. நான் தந்தையாகி விட்டேன் என்று மகிழ்ச்சி அடைகிறான். அடு்த்த நொடி ஐயோ பையனை எந்தப் பள்ளியில் சேர்ப்பது! எவ்வளவு செலவாகும்! பையன் நன்றாகப் படிக்க வேண்டுமே! என்ற கவலை, சந்தேகம் வந்து விடுகின்றது.
இவை தான் உடலில் இரத்தத்தில், நாளமில்லா சுரப்பியில் பல மாறுதல்கள் ஏற்பட்டு, உடலில் கேன்சர் வரை எடுத்துச் செல்கிறது. இருதயத்தை, அதன் இயக்கத்தை பலவீனப்படுத்துகின்றது.
மனதில் தெளிவு வேண்டுமெனில் குடல் சுத்தம் வேண்டும். உடலில் கெட்ட வாயுக்கள் தங்கக்கூடாது. மூளைக்கு ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்க வேண்டும். நுரையீரல், இருதயம், வயிற்றுப்பகுதி, சிறுநீரகப் பகுதி மலக்குடலில் கழிவுகள் தங்கக்கூடாது. இந்த முக்கிய உறுப்புகளிலுள்ள கழிவுகள் நீக்கி வளமாக, நலமாக இயங்கச் செய்யும் ஆசனம் தான் அதோமுக சவனாசனம். அதன் மூலம் மனதிலுள்ள பயம் கவலையையும் நீக்கி உடல், மன ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அதோமுக சவனாசனத்தை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
அதோமுக சவனாசனம் செய்முறை:
- விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- அதிலிருந்து எழுந்து உச்சந்தலையை தரையில் வைக்கவும்.
- இரு கால்களையும் நேராக நீட்டி உடலை குன்றுபோல் வைக்கவும்.
- இரு கைகளையும் தலைக்கு முன்னால் நீட்டவும்.
- இரு கால் விரல்கள் மட்டும் தரையில் படும்படி கால்களை உயர்த்தவும்.
- இந்நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக கால்களை மடக்கி கைகளையும் மடக்கி தலையை தரையில் இருந்து நிமிர்ந்து பொறுமையாக அமரவும்.
- ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை செய்யவும்.
பலன்கள்:
- நுரையீரல், இருதயம், வயிறு தலை கீழாக வருவதால் அதில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறுகின்றது. இந்த மூன்று உறுப்புகளும் சிறப்பாக இயங்குகின்றது.
- ராஜ உறுப்புகளில் ஒன்றான இருதயம் பாதுகாக்கப்படுகிறது.
- குடல், வயிறு சுத்தமடைகின்றது.
- மலச்சிக்கல் நீங்குகின்றது.
- சிறுநீரகம், சிறுநீரகப்பை சீராக இயங்கும். அதில் கற்கள் இருந்தால் கரையும். கழிவுகள், ரசாயனக் கழிவுகள் தங்காது.
- பிட்யூட்டரி, பீனியல் சுரப்பி நன்றாக இயங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு இயங்கும். மூளை செல்கள் புத்துணர்வு பெறுகின்றது.
- அதிக தசை குறைந்து உடல் மிடுக்காகவும், நல்ல தோற்றப் பொலிவுடனும் திகழலாம்.
- கண்கள், காதுகள், தொண்டை உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் நீங்குகின்றது.
- முகப் பொலிவுடன், முகத்தசைகள் சுருக்கம் விழாமல் வாழலாம்.
- உடல் உறுப்புகளும் சுத்தமடையும்.
- மனதில் பயம், கவலையும் நீங்கும். உடல் மன ஆரோக்கியத்துடன் வளமாக வாழலாம்.
உணவு
மனிதனின் மனதில் எழும் எண்ணத்திற்கும் உண்ணும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சாத்வீகமான உணவு, பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய், கொய்யாபழம், கருப்பு திராட்சை, பேரீச்சம் பழம் உணவில் சேருங்கள். பழைய குழம்பு, சாதம், பிரியாணி பிரிட்ஜில் பல நாள் வைத்ததை உண்ணாதீர்கள். குடல் கெட்டுவிடும். அதனால் மனமும் கெடும். மாமிசம் தவிர்ப்பது நலம்.
மாதம் ஒரு நாள் மட்டும் காலை வெறும் வயிற்றில் பல் துலக்கியவுடன் வேப்ப இலை கொழுந்து சிறிது சாப்பிடுங்கள். இந்த ஆசனமும் செய்து உணவிலும் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் உங்கள் கையில் தவழும். ஆனந்தமாக வாழலாம்.
இந்த ஆசனத்துடன் சுஜி முத்திரையும் பயிற்சி செய்யவும்.
சுஜி முத்திரை செய்முறை:
- விரிப்பில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- பின் இரண்டு கைகளையும் தனித்தனியே இறுக்கமாக மடக்கவும்.
- கட்டைவிரல் நடு விரலின் மேல் இறுக்கமாக இருக்க வேண்டும்.
- கைகளை மார்புக்கு அருகில் வைக்கவும்.
- வலது கையை வலது பக்கமும் இடது கையை இடது பக்கமும் மூடிய நிலையில் நகர்த்தவும்.
- இரண்டு கைகளிலும் ஆள்காட்டி விரலை மட்டும் மேல் நோக்கி நீட்ட வேண்டும்.
- இந்நிலையில் மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- மூன்று நிமிடங்கள் இருந்தால் போதும்.
- பின் சாதாரணமாக கைகளை கீழே போட்டுக் கொள்ளலாம்.
நம் ஆள்காட்டி விரலில் பெருங்குடல் சம்பந்தமான சக்தி ஓட்டப்பாதை உள்ளது. மற்ற விரல்களை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டும் பொழுது உடலில் உள்ள பெருங்குடல் ஓட்டப்பாதை திறக்கும். அதனால் அந்த ஓட்டப் பாதைக்குள் அதிக சக்தி செல்வதால் பெருங்குடல் நன்றாக செயல்பட்டு மலச்சிக்கல் நீங்குகின்றது.
நன்கு பசி எடுக்கும்
நிறைய மனிதர்களுக்கு நன்றாக பசியில்லாமல் சாப்பிட எல்லாம் இருந்தும் வேண்டா வெறுப்பாக பசியில்லாமல் சாப்பிடத் தயங்குகின்றனர். அவர்கள் எல்லாம் இந்த சுஜி முத்திரை செய்தால் மலமும் எளிதாக வெளியேறும். நல்ல பசியும் எடுக்கும். பசித்தால் புசி என்பது பழமொழி. எனவே இந்த முத்திரையை தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் செய்யுங்கள். பலன் நிச்சயமுண்டு.
ஒற்றைத் தலைவலி நீங்கும்
உடலில் கழிவு (மலம்) சரியாக வெளியேறாதது தான் ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணமாகும். இந்த சுஜி முத்திரை செய்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
ஜலதோஷம் நீங்கும்
அடிக்கடி சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். என்ன மருந்து சாப்பிட்டாலும் கேட்கவில்லை என்பவர்கள் சிரமம் பாராமல் தொடர்ந்து இந்த முத்திரை செய்யுங்கள். ஜலதோஷம் ஓடிவிடும்.
வயிற்றுவலி நீங்கும்
சிலருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். அவர்கள் இந்த முத்திரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மூலநோய் குணம்
மலம் வெளிவராதது தான் நாளடைவில் மூலநோயாக மாறுகின்றது. அது ரத்த மூலமாகவும் மாறி உட்கார முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றவர்கள் இந்த முத்திரை செய்யுங்கள். அத்துடன் அதிக காரம் சேர்க்காமல் பழம், கீரை, காய்கறிகள், கருணைக்கிழங்கு சாப்பிடுங்கள். மூலம் பறந்து விடும்.
ஆஸ்துமா நோய்
பனிக்காலம், வெயில் காலம் இரண்டிலும் சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவால் அவதியுறுபவர்கள் இந்த முத்திரை செய்யுங்கள். நல்ல பலன் உண்டு. அத்துடன் யோகாசனத்தில் புஜங்காசனமும், உசட்டாசனமும் தக்க குருவிடம் பயின்றால் ஆஸ்துமாவை அறவே ஒழிக்கலாம்.
வாயுத் தொல்லை நீங்கும்
வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரை செய்தால் நல்ல பலன் உண்டு. சிலருக்கு திடீரென்று இடுப்பு, முதுகில வாயு பிடித்து நிமிர முடியாமல் அல்லல் படுவார்கள். அவர்களுக்கு இந்த முத்திரை அருமருந்தாகும்.
மன அமைதி
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறினாலே மனம் அமைதி உண்டாகும். மேலும் மன அழுத்தம் நீங்கும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அமைதி வேண்டித்தான் செய்கின்றோம். ஆனால் உடல் கழிவுகள் சரியாக நீங்கி உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இயங்கினால் தான் நமக்கு உடல், மன அமைதி கிட்டும். இந்த முத்திரை மூலமே நாம் உடல், மன அமைதியை பெற முடியும்.
முக்கிய குறிப்பு:
மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் மலச்சிக்கல் தீரும் வரை தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்யலாம்.
வயிற்றுப் போக்கு இருந்தால் அந்த சமயம் இந்த முத்திரையை செய்ய வேண்டாம்.
எளிய முத்திரையில் அரிய பலன்கள் உள்ளன. இதனை தயவு கூர்ந்து நம்பிக்கையுடன் செய்யுங்கள். அதன் பலனை அனுபவியுங்கள். பின் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதனை நீங்களே கற்றுக் கொடுக்கலாம். எல்லாம் நம் கைவிரல்களில் அடக்கம். நமக்கு நாமே மருத்துவராகும் அரிய கலைதான் முத்திரை.