25
Oct
ஆஸ்துமா குணமாக்கும் சுப்த பாதாங்குஸ்தாசனம்
இன்று நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகள் பெருகிக் கொண்டே வருகின்றன. இதனை ஒரு தொழிலாக ஆரம்பித்து விட்டார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தான் சம்பாதித்த பணத்தில் பெரிய மருத்துவமனையை ஸ்டார் ஹோட்டல் போல் கட்டி, பணம் கறக்கிறார்கள். மக்களும் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம், அந்த மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி, அறுவை சிகிச்சையும் செய்து பறிகொடுத்து விட்டு பரிதாபமாக நிற்கும் காட்சியை நாம் அதிகம் பார்க்கிறோம். இப்படி கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.
என்று மருத்துவமனைகள் வியாபார நோக்குடன் ஆரம்பித்தார்களோ அன்றே நாம் விழித்து கொள்ள வேண்டாமா? இதற்குள் நாம் காலடி எடுத்து வைக்க கூடாது என்ற எண்ணம் வர வேண்டாமா? எதனால் இவ்வளவு நோய்கள் வந்து, இவ்வளவு கூட்டம் மருத்துவமனையில் நிரம்புகிறது?
இறைவன் கொடுத்த இந்த உடலை, சும்மா கிடைத்தது என்று அலட்சியப்படுத்தி உடலை சுகமாக வாழ மட்டும் பயன்படுத்தினோம். சோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். சுகமான வாழ்வு வேண்டுமா? நோய் இல்ல வாழ்வு வேண்டுமா? உடலை சும்மா வைத்திருக்காமல் சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்யுங்கள். தினமும் காலை / மாலை என இருவேளையும் 5 நிமிடம் இந்த ஆசனம் செய்து வந்தால், மருத்துவமனை பக்கம் போகாமல் திடமாக நீங்கள் வாழலாம்.
நோய் என்பது என்ன? உடலில் கழிவுகள் ஒழுங்காக வெளியேறாமல் தங்குவதுதான்! மனதில் பல குப்பை எண்ணங்கள் தங்கிருப்பது தான். ஒரு மனிதனின் உடல் கழிவுகள் மற்றும் மனக் கழிவுகள் சரியாக வெளியேறினால் நோய் என்பதே வராது! உடல் கழிவுகள் சரியாக வெளியேற யோகாசனமும் மனக்கழிவுகள் வெளியேற தியானமும் செய்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்! எனவே இந்த சுப்த பாதாங்குஸ்தாசனம் தினமும் செய்யுங்கள். உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். உடல் உள்ளுறுப்புகளும் சிறப்பாக இயங்கும்!
சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்முறை:
- விரிப்பில் நேராக படுக்கவும்.
- மூச்சை இழுத்துக் கொண்டு, வலது காலை நேராக நிறுத்தவும்.
- இப்போது வலது கையால் வலது கால் பெருவிரலை பிடிக்கவும்.
- இதே நிலையில் 10 வினாடிகள் மூச்சை அடக்கியிருக்கவும்.
- பிறகு மூச்சை மெதுவாக வெளியே விட்டு காலை கீழே தரையில் போடவும்.
- இதே முறையில் இடது காலை மாற்றி செய்யவும்.
- ஒவ்வொரு காலிலும் இரண்டு முறை செய்யுங்கள்.
இந்த ஆசனத்தால் கிடைக்கும் பலன்கள்!
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் மிகச் சிறப்பாக இயங்கும். நரம்புகள் பலம் பெரும்.
சுவாச மண்டலம்
ஒவ்வொரு காலை மேலே உயர்த்தும் பொழுது, மூச்சை உள்ளிழுக்கிறோம். மூச்சை நிறுத்துகிறோம். பிறகு மூச்சை வெளிவிட்டு, காலை கீழே போடுகிறோம். வலது கால், இடது கால் என மாற்றியும் செயகிறோம். இது ஒரு முழுமையான சுவாசப் பயிற்சியாகிறது! அதனால் வலதுபுறம் இடதுபுறம் பிராணன் உடல் உள்ளறுப்புகளுக்கு பூரணமாக கிடைக்கிறது. சுவாச மண்டலமும் மிக சிறப்பாக இயங்குகிறது.
ரத்த ஓட்டம் சிறப்பாகும்
ரத்தம் சுத்தமாகும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் மிகச் சிறப்பாக இயங்கும். எந்தக் கழிவுகளும் உடலில் தங்காது.
ஜீரணம் சீராகும்
சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாகும். அவற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். ஜீரண மண்டலம் வலுப்பெற்று சீராக இயங்கும்.
இதயம் பலம்பெறும்
ராஜ உறுப்புகளான இதயமும் நுரையீரலும் நன்றாக பலம் பெற்று சிறப்பாக இயங்கும். இதய வலி, இதயத்தில் ஓட்டை, இதய வால்வில் வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள், இந்த ஆசனம் செய்தால் வரவே வராது. உங்கள் குழந்தைகளின் பள்ளிப் பருவத்திலேயே இந்த ஆசனம் செய்யப் பழகினால் அவர்களின் இதயம் 120 வருடங்கள் வரை மிக சிறப்பாக இயங்கும்.
நீரிழிவு ஓடும்
கணையம் மிகச் சிறப்பாக இயங்கும். நீரழிவு வராது. நீரழிவு உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த ஆசனத்தை காலை / மாலை என இருவேளையும் பயிற்சி செய்தால் ஒரு மண்டலத்திலேயே (48 நாட்கள்) நீரிழிவு ஓடிவிடும்.
ஆஸ்துமா நீங்கும்
சுவாச மண்டலமும் நுரையீரலும் பலம் பெற்று, அவற்றில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறும். இதனால் ஆஸ்துமா / சைனஸ் பிரச்சனை அறவே நீங்கும். ஆனந்த வாழ்வு உங்கள் வசமாகும்.
ரத்த அழுத்தத்தை போக்கும்
உடலில் குறைந்த ரத்த அழுத்தம், அதிகமான ரத்த அழுத்தம் உள்ளிட்ட வியாதிகள் சரியாகும். நீங்கள் நலமாக வாழலாம்.
இடுப்பு வலி அகலும்
இடுப்புவலியும் முதுகு வலியும் அறவே அகலும்.
சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்
சிறுநீரக கோளாறுகள் அகலும். சிறுநீரகம் தனது பணிகளை மிகச் சிறப்பாக செய்யும்.
உடலின் வடிவம் அழகாகும்
அதிக உடல் எடை குறையும். குறிப்பாக பெண்களுக்கு இந்த ஆசனம் மிக நல்ல பலனைத் தரும். இடுப்புச் சதை, தொடை தசை அதிகமாக உள்ளவர்கள், இந்த ஆசனத்தின் மூலம் அவற்றைக் குறைத்து, அழகான உடல் அமைப்பைப் பெறலாம்! உடலில் தசை கட்டுப்பாட்டுடன் இருந்தால் சுறுசுறுப்பு தானாக வரும். மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.
ஆசனத்துடன் செய்யுங்கள் எளிய தியானம்…
இந்த ஆசனத்தை இரண்டு முறை செய்து விட்டு, நேராக அமர்ந்து கண்களை மூடுங்கள். இயல்பாக நடைபெறும் மூச்சை மட்டும் 5 முதல் 10 நிமிடம் நன்றாக கூர்ந்து கவனிக்கவும். இதுவே தியானம்! அப்படி கவனிக்கும்போது மனதிலுள்ள தேவையற்ற எண்ணங்கள் அழிந்துவிடும். மனமும் உடலும் அமைதி பெரும். உடல் உள்ளுறுப்புகளுக்கு பிராண ஆற்றல் நன்றாக கிடைக்கும். மனோ சக்தி ஒருமுகப்படும். நினைத்த காரியத்தை சாதிக்கும் ஆற்றலும் பிறக்கும்.
வளம் தரும் உணவு முறை…
- இந்த ஆசனமும் தியானமும் உடலுக்கும் மனதுக்கும் நலமளிக்கும். தவிர, காலையில் அருகம்புல்சாறு, இஞ்சி, கொத்துமல்லித்தழை, காபி, அன்னாசிப்பழம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
- எள், கொள்ளு, உளுந்து, அவரை, துவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களையும் உணவுடன் அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்.
- பாகற்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ உணவில் அவ்வப்போது சேருங்கள்.
- கருப்பு திராட்சையும் முருங்கைக்கீரை சூப்பையும் தினமும் சாப்பிடுங்கள்.