26
Nov
ஆஸ்துமா நீக்கும் யோகா
சென்ற இதழில் ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள், அது தரும் பிரச்சனைகள் பற்றி சொன்னேன். இந்த இதழில் அதை விரட்டுகிற யோகாசனங்களை பற்றி சொல்கிறேன்.
உடலில் உள்ள நாடி நரம்புகளின் செயல்பாடு, சளியின் மூலம் தடைபடுவது தான் ஆஸ்துமாவிற்கு மூலகாரணம். நாடிகளை சுத்தம் செய்யும் ஒரே பயிற்சி, எளிய நாடி சுத்தி பயிற்சி தான். இதனை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். உடலில் சளி தொந்தரவு நீங்கும். நாடி நரம்புகளில் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். நாடிகள் சுத்தமானால் மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும். அது மட்டுமா? ஆஸ்துமா என்ற கொடிய வியாதி பறந்தோடும். நமது உடலுக்குள் கடந்து உள்ளே செல்லும் மூச்சு தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள்.
நாடிசுத்தி எப்படி செய்ய வேண்டும்?
இருக்கை:
- உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- சுகாசனத்தில் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம்.
- ஆஸ்துமா வியாதி உள்ளவர்கள் ஒரு நாற்காலியில் ஒரு வெள்ளை துணி விரித்து அதில் அமர்ந்து கொள்ளலாம்.
- முதுகெலும்பு நேராக வைத்து நாற்காலியின் பின்புறம் முதுகு படும்படி அமர்ந்து கொள்ளலாம்.
- உடல் நிலை ஓரளவு வளமாக உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளலாம்.
தயார் நிலை:
- நாடிகளை சுத்தம் செய்யும் நாடி சுத்தியின் முழு பலனை அடைய நம் உடலையும் மனதையும் தயார் செய்ய வேண்டும்.
- நிமிர்ந்து சுகாசனத்தில் அமர்ந்தவுடன் கண்களை மூடவும்.
- கைகளை சின் முத்திரையில் வைக்கவும்.
- உங்களது மனதை தலையின் வெளி தசைகள், கழுத்து, தோள்பட்டையின் வெளி சதைகள், வலது கை, இடது கை, இதயம், வயிறு, வலது கால், இடது கால், தலை முதல் கால் வரை என ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி அந்தப் பகுதியில் உள்ள எல்லா அழுத்தங்களையும் பூமிக்கு அர்பணிப்பதாக எண்ணி ரிலாக்ஸ் செய்து கொண்டே வரவும்.
- இரண்டு நிமிடம் வரை இவ்வாறு ரிலாக்ஸ் செய்யவும்.
- இப்போது மிக மெதுவாக இரண்டு நாசி வழியாகவும் மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை இரண்டு நாசி வழியாகவும் வெளி விடவும்.
- மூச்சை உள்ளிழுக்கும்போது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும்.
- மூச்சை வெளி விடும்போது நம் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள டென்ஷன் அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும்.
- இதே போல் 2 முதல் 3 நிமிடம் செய்யவும்.
- இப்போது நமது உடல் வெளி தசைகள் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள எல்லா அழுத்தமும் டென்ஷனும் வெளியாகி உங்கள் உடல் நாடி சுத்தியின் முழுப்பலனை அடைவதற்கு தயாராகி விட்டது.
பயிற்சி 1:
- இடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும்.
- பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்க்கவும்.
- மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- பெருவிரலினால் வலது நாசியை அடைக்கவும்.
- இடது நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை முடிந்த அளவு உள்ளிழுக்கவும்.
- இடது நாசிலேயே மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- மீண்டும் இடது நாசியிலேயே மூச்சை உள்ளிழுத்து இடது நாசி வழியாகவே மூச்சை மெதுவாக வெளியிடவும்.
- இதே போல் 10 முறை செய்ய வேண்டும்.
- தொடர்ந்து 10 முறை செய்ய முடியாதவர்கள் 5 முறை செய்துவிட்டு ஒரு நிமிடம் ரிலாக்ஸ் செய்து விட்டு மீண்டும் ஐந்து முறை செய்யலாம்.
பயிற்சி 2:
- வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைக்கவும்.
- வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- வலது நாசியிலேயே மீண்டும் மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- மீண்டும் வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து உடன் வலது நாசியில் மூச்சை வெளியிடவும்.
- இதே போல் 10 முறை நிதானமாக செய்யவும்.
பயிற்சி 3:
- இப்போது இடது கை பெருவிரலால் வலது நாசியை அடைக்கவும்.
- இடது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும்.
- உடனே இடது நாசியை மோதிர விரலால் அடைக்கவும்.
- வலது நாசி வழியாக மூச்சை வெளியிடவும்.
- இதே போல் மீண்டும் இடது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மூச்சை வெளி விடவும்.
- இதே போல் 10 முறை செய்யவும்.
பயிற்சி 4:
- இப்போது வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைக்கவும்.
- வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- உடன் பெருவிரலால் வலது நாசியை அடைக்கவும்.
- இடது நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளி விடவும்.
- மீண்டும் வலது நாசி வழியாக மூச்சை இழுத்து இடது நாசி வழியாக மெதுவாக வெளி விடவும்.
- இதே போல் 10 முறை செய்யவும்.
பயிற்சி 5:
- மேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிகளை நிதானமாக செய்த பின் கண்களை மூடவும்.
- இயல்பாக இருநாசி வழியிலும் மூச்சு உள்ளே செல்வதையும், மூச்சு வெளிவருவதை மட்டும் கூர்ந்து கவனிக்கவும்.
- 3 முதல் 5 நிமிடம் உங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்தவும்.
- பின் மெதுவாக கண்களை திறந்து கொள்ளவும்.
பயிற்சி 6 (ஜலந்திர பந்தம்):
- இப்போது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- உடனே தலையை குனிந்து 10 வினாடி மூச்சை அடக்கியிருக்கவும்.
- உடனே மெதுவாக இரண்டு நாசி வழியாகமும் மூச்சை வெளிவிட்டு தலையை நிமிர்த்தவும்.
- இதே போல் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து உடனே தலையை குனிந்து 10 வினாடி மூச்சடிக்கியிருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை வெளி விட்டு நிமிர்ந்து கொள்ளவும்.
- இதே மாதிரி 10 தடவை பயிற்சி செய்யவும்.
- 5 முறை பயிற்சி செய்து சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் 5 முறை பயிற்சி செய்யலாம்.