நலம் தரும் நாற்காலி யோகா
உங்கள் குரலை ஊரே கொண்டாடணுமா?? பிரமர முத்திரை
இதைச் செய்தால் 70 வயதிலும் 30 வயதுக் குரலாகும்!!
மனிதன் என்றால் நல்ல வாட்டசாட்டமான அழகான உடல் வேண்டும். அடுத்து, அழகான குரல் வேண்டும். அப்பொழுது தான் வாழ்வு நலமாக இருக்கும். உடல் மிடுக்காக, அழகாக சிலர் இருப்பார்கள். ஆனால், குரலில் கம்பீரம் இருக்காது. சிலருக்கு 40 வயது வரை நல்ல குரல் வளம் இருக்கும். அதன் பிறகு குரல் வளமில்லாமல் போகும். இன்றைய உலகம் போட்டி நிறைந்த சூழ்நிலையில் உள்ளது. ஒரு மனிதன் தனது லட்சியங்களை அடைய வேண்டுமெனில் நல்ல திடமான உடலும் கம்பீரமான குரலும் மிகவும் அவசியம்!
சிலருக்கு 40 வயதுக்கு மேல் மூக்கடைப்பு, சளி பிரச்சனை அதிகமாகி, குரலில் மாற்றம் ஏற்படும். ஒரு சிலர், நல்ல திறமைசாலியாக இருப்பார்கள். பேச்சாற்றலும் இருக்கும். ஆனால், அவர்களால் சத்தமாக பேச முடியாத நிலை இருக்கும். இந்த நிலை மாறி, குரல் வளமிக்க மனிதனாகத் திகழ யோகத்தில் எளிய மூச்சுப் பயிற்சியும், முத்திரையும் இருக்கிறது.
குரலைப் பற்றிய கவலை உங்களுக்கு ஏற்படாமல், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் சொல்லும் யோகப் பயிற்சிகளை நாற்காலியில் அமர்ந்து, தொடர்ந்து பயிலுங்கள்.
இந்தப் பயிற்சியை குரல் வளம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் பயிலலாம். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் குரல் இளமையாக இருக்கும்.
வயதான காலத்தில் நாம் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ பணம் வேண்டும் என்று காப்பீடுகளில் பணம் கட்டுவோமல்லவா? அடுத்த 20 வருடங்கள் கழித்து, அந்தப் பணம் முதிர்வு பெற்று வரும்போது, அது நம் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுமோ, அதேபோல் குரல் வளத்துக்காக இப்போதிருந்தே தினமும் 10 நிமிடம் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். எவ்வளவு வயதானாலும் உங்கள் குரல் நிச்சயம் கம்பீரமாக இருக்கும்!
பிரமரி மூச்சுப் பயிற்சி
- நாற்காலியில் நிமிர்ந்து அமருங்கள்.
- இரு கைகளிலும் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியை தொடும்படி, படத்தில் உள்ளதைப் போல் வைக்கவும்.
- இப்போது மூச்சை மெதுவாக இரு நாசி வழியாக இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி 10 முறை செய்யவும்.
- இப்பொழுது இரு நாசி வழியாக மூச்சை இழுத்து, 10 விநாடி மூச்சை அடக்கி, பிறகு மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளியே விடவும்.
- அப்படி மூச்சை வெளிவிடும் பொழுது ‘ம்’ என்ற சத்தத்துடன் மூச்சை வெளிவிடவும்.
- உங்களுடைய உணர்வை தொண்டையின் உள்பகுதியில் நிலைநிறுத்தவும்.
- இதேபோல் 5 முறை நிதானமாக பயிற்சி செய்ய வேண்டும்.
- அடுத்ததாக ‘பிரமர முத்திரை’ பயிற்சியை செய்ய வேண்டும்.
பிரமர முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவும்.
- இருநாசி வழியே மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- இப்படி 10 முறை செய்யவும்.
- இப்போது ஆள்காட்டி விரலை மடக்கி, நடுவிரல் நுனியை கட்டை விரல் நுனியோடு அழுத்திப் பிடிக்கவும்.
- மற்ற இரு விரல்களும் நேராக தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- ஆள்காட்டி விரலானது கட்டைவிரலின் அடியில் வளைவில் மடங்கி இருக்க வேண்டும்.
- கட்டைவிரல், நடுவிரலை மடக்கி அதன் பக்கவாட்டில் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும். (படத்தைப் பார்க்கவும்).
- இந்த நிலையில் இரு கைகளையும் வைத்து, 2 நிமிடம் பயிற்சி செய்யவும்.
- காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக இந்தப் பயிற்சியை செய்யுங்கள்.
‘பிரமரி மூச்சுப் பயிற்சி’ மற்றும் ‘பிரமர முத்திரை’ ஆகிய இந்த இரண்டு பயிற்சிகளும் உங்கள் குரலை மட்டும் வளமாக்கவில்லை. அதையும் தாண்டி, சளி மற்றும் சைனஸை நீக்குகிறது. ஆழ்ந்த நித்திரை கிடைக்கச் செய்கிறது. நல்ல நித்திரை இருக்கும் உடலில் நோய் எதிர்பாற்றல் கிடைக்கும். தவிர, இந்த முத்திரையானது தைராய்டு சுரப்பியையும் சரியாகச் சுரக்கச் செய்கிறது!
யோகப் பயிற்சியுடன் கடைப்பிடிக்க வேண்டியவை:
- ஐஸ் வாட்டர், பாட்டில்களில் அடைத்த குளிர்பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- தயிரை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், அதைக் கடைந்து மோராக்கி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- புளிப்புச் சுவையை உணவில் அதிகமாக சேர்க்காதீர்கள். புளிக்குப் பதிலாக தக்காளி சேர்த்து சமைக்கலாம். அதேபோல அதிகமான காரத்தையும் தவிர்க்கவும்.
- மைதா உணவுகளைத் தவிர்க்கவும். குறிப்பாக, பரோட்டா சாப்பிட வேண்டாம்.
- எண்ணெய்ப் பண்டங்களை அறவே தவிர்க்கவும். குறிப்பாக, தெருக்களில் சுகாதாரமில்லாமல் விற்கப்படும் வடை / பஜ்ஜி வகையறாக்களை வாங்கி சாப்பிடாதீர்கள்.
உணவு முறை எப்படி?
- மாதம் ஒருமுறை தூதுவளைக் கீரையை ஒரு கரண்டி அளவில் சுத்தம் செய்து எடுத்து, வதக்கி சாப்பிடவும்.
- துளசி, அருகம்புல் இரண்டையும் அலசிவிட்டு, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் போட்டு மூடி வைக்கவும். காலை எழுந்ததும் பல் துலக்கி விட்டு, அந்த நீரை மட்டும் குடிக்கவும். வாரம் இருமுறை இப்படிச் செய்யவும்.
- இரவு நேரங்களில் தயிர் / மோர் / ஐஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
- இரவு படுக்குமுன் 8 எண்ணிக்கையில் மிளகை எடுத்து பொடியாக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறியதும் குடிக்கவும். இப்படி மாதம் ஒரு நாள் மட்டும் செய்யவும்.
- வெளியூர் செல்லும் பொழுதும், ஹோட்டல்களில் சாப்பிடும் பொழுதும் வெந்நீர் மட்டும் பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- வாரம் ஒருமுறை மாலையில், பசும்பாலுடன் ஒரு சிறிய கரண்டி மஞ்சள்தூள், கைப்பிடியளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும்.
சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த யோகப்பயிற்சியை தினமும் செய்து, உங்கள் தொண்டையை பாதுகாக்கலாம். திக்குவாய் பிரச்சனையுள்ள குழந்தைகள் தொடர்ந்து பயின்று வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.