‘கஷ்டம்’ என்பது என்ன? உடலில் ஏதாவது தொந்தரவு, உடல் இயக்கம் சரியில்லை என்றால், ‘மிகவும் கஷ்டமாக உள்ளது’ என்கிறோம். மலம் வெளியே செல்வதில் பலருக்கு கஷ்டமாக உள்ளது. மூட்டுவலி கஷ்டப்படுத்துகிறது. இவை உடல் சார்ந்த கஷ்டங்கள்.
இவை தவிர, ‘மனக் கஷ்டம்’ வேறு! குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் சரியான புரிதல் இல்லை. இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் மனக்கஷ்டம். அலுவலகத்தில் வேலை செய்யுமிடத்தில் ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை, அதனால் மனக்கஷ்டம். இப்படி உடலாலும், மனதாலும் கஷ்டங்கள் மனிதர்களுக்கு நிறையவே உண்டு.
‘எதனால் இந்தக் கஷ்டம்? இதற்கு தீர்வு உள்ளதா?’ என்றால், ‘நிச்சயம் உள்ளது’ என்பதே பதில்! உடல், மனக் கஷ்டங்கள் நீங்க, யோகக்கலை பயிலுங்கள். அது மட்டுமே உடலையும், மனதையும் இணைத்து, ஆன்மாவில் லயிக்கச் செய்து ஆத்மானந்தத்தையும், ஆரோக்கியத்தையும், அமைதியையும் தரவல்லது!
நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சிறப்பான ரத்த ஓட்டத்தையும், மூச்சோட்டத்தையும், வெப்ப ஓட்டத்தையும் தருவதும், கழிவுகளை அகற்றவல்லதும், நாளமில்லா சுரப்பிகளை நன்றாக இயங்க வைப்பதும் யோகாசனம் தான்! அதுமட்டுமல்ல, கோபம், பொறாமை, கவலை, மன அழுத்தம், ஆணவம் உட்பட மனிதனின் தீயப் பண்புகளை மாற்றி, நற்பண்புகளைக் கொடுப்பதும் யோகாசனமே! அறிவு மலர்ந்தால் ஆணவம் அழியும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். இதனால் உடல், மனக் கஷ்டங்களும் நீங்குகிறது. குறிப்பாக, அஷ்டகோணாசனம் செய்தால், கஷ்டங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும்.
அஷ்டகோணாசனம் செய்முறை:
- விரிப்பில் அமரவும். இரு கால்களையும் சற்று அகற்றவும்.
- இரு கைகளினால் இரு கால்களின் பெரு விரல்களைப் பிடிக்கவும்.
- பிறகு மெதுவாக ஒவ்வொரு காலாக சற்றே மேலே தூக்கவும்.
- மெதுவாக இரு கால்களையும் பக்கவாட்டில் உயர்த்தி, கைகளினால் பிடித்துக்கொள்ளவும்.
- இதே நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.
- பிறகு மெதுவாக கால்களை மடக்கி, கைகளை விடுவித்து அமரவும்.
- இந்த யோகாசனத்தை நிதானமாகப் பழகவும்.
- முதலில் 5 விநாடிகள் இருந்தாலே போதும்.
- தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி செய்தப் பிறகு 10 விநாடிகள் இருக்க முடியும்.
- பின்னால் விழாதவாறு, உங்கள் உடலைப் பார்த்து பொறுமையாக ஒவ்வொரு காலாக நீட்ட வேண்டும்.
குறிப்பு
முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதய பலவீனமுள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தகுந்த யோகா வல்லுநரின் நேரடிப் பார்வையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த ஆசனத்தால் கிடைக்கும் பலன்கள்:
மூல வியாதி நீங்கும்
மூல வியாதி நீங்கும். ரத்த மூலம் நீங்கும். ஆசன வாயில் புண், அரிப்பு இருந்தாலும் சரியாகும்.
மலச்சிக்கல் தீரும்
இன்று பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இதனால் பசியின்மை, வயிறு உப்பிசம், வாயு பிரச்சனை, மந்தமான நிலை, உடல் சோர்வு ஏற்படுகிறது. மலம், சிறுநீர் சரியாக உடலைவிட்டு வெளியேற இந்த ஆசனம் உதவுகிறது.
பெண்களுக்கு இடுப்புவலி
நிறைய பெண்களுக்கு இடுப்புவலி ஏற்படும். இது நமது உடலில் கிட்னி பலவீனத்தாலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த ஆசனம், கிட்னியை நன்றாக இயங்கச் செய்கிறது. நல்ல பிராணசக்தி கிடைப்பதால், இடுப்புவலியும் நீங்கும். தவிர, அதிகமான இடுப்பு தசைகளையும் குறைக்கும்.
கழுத்து வலி போய்விடும்
கழுத்து வலி வராது. இருந்தாலும் இந்த ஆசனம் மூலமாக முழுமையான தீர்வு உண்டு! மன அழுத்தத்தினால் பெரும்பாலும் கழுத்து வலி ஏற்படும். மன அழுத்தத்தை இந்த ஆசனம் நீக்கும். அதனால் கழுத்துப் பகுதி நரம்புகளுக்கு ரத்தம் நன்றாகப் பாய்ந்து, கழுத்து வலியும் சரியாகும்.
நீரிழிவு வராது
நீரிழிவு வராது. கணையம் நன்றாக இயங்கும். நீரிழிவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை காலை / மாலை இருவேளையும் 10 விநாடிகள் மூன்று முறை பயிற்சி செய்தால், நீரிழிவு கட்டுக்குள் வரும்.
தோல் வியாதி சரியாகும்
இந்த ஆசனத்தால் உடலில் கழிவுகள் தடையின்றி வெளியேறும். அதனால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், அரிப்பு, சிரங்கு வராது. தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
கண் பார்வை ஷார்ப்பாகும்
கண் பார்வை எவ்வளவு வயதானாலும் மங்காது. லிவருக்கு நல்ல பிராணசக்தி கிடைப்பதால், கண் கோளாறு, கண்ணுக்குக் கீழ் கருப்பாக படர்தலும் தடுக்கப்படும்.
கால்கள் பலம் பெறும்
கால்கள் நன்றாக பலம் பெறும். கைகளும் நன்கு இயங்கும். வலுவாக இருக்கும். கைவலியோ, கால்வலியோ வராது.
வாயு தொல்லை இல்லை
உடலில் வாயு பிரச்சனை இருக்காது. வாயுப்பிடிப்பும், அதனால் ஏற்படும் வலியும் நீங்கும்.
முதுகெலும்பு திடமாகும்
முதுகெலும்பு திடப்படும். முதுகுவலி வராது. முதுகெலும்பு திடமாக இருப்பதால் தெளிந்த சிந்தனையிருக்கும். அறிவில் மலர்ச்சியிருக்கும். படபடப்பு, கோபம், கவலை உள்ளிட்டவை இருக்காது. மிக நிதானமாகச் சிந்தித்து, ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்து வெற்றி பெறலாம்.
மலக்குடல் சுத்தமாகும்
மலக்குடலில் கழிவுகள் தங்காது. சிறுகுடல், பெருங்குடலிலும் நச்சுப் பொருட்கள் தங்காது. இந்த ஆசனத்தால், வயிற்றுப்பகுதி முழுவதும் ரத்த ஓட்டம் நன்றாகப் பாயும். அதனால் பெண்களுக்கு சுகப்பிரசவமாக அவர்கள் உடலும் தயாராகிறது. உடலில் உள்ள அதிக தசைகளும் குறைந்து, அழகான தோற்றம் கிடைக்கிறது.
கால் பாதம் வீங்காது
கால் பாத வீக்கம் வராது. உஷ்ணத்தினால் பித்த வெடிப்பு வராது. கால் நகங்கள் கருப்பாகாமல், பளபளப்பாக இருக்கும்.
ஆசனத்துடனான உணவு முறை எப்படி?
- வாரம் ஒரு நாள் ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கவும். இதனால் உடல் உஷ்ணம் சமமாகும்.
- முருங்கைக்கீரை, அகத்திக்கீரை மற்றும் சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
- எலுமிச்சைச்சாற்றை அதிகாலையில் நீருடன் கலந்து, வாரம் ஒருமுறை பருகவும்.
- மாதம் ஒரு நாள் காலையில் சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரத்தை சம அளவு எடுத்து கஷாயம் செய்து சாப்பிடவும்.
- மாதம் ஒரு நாள், வாழைத்தண்டை உணவில் சேர்க்கவும். தவிர, காலையில் 8 அருகம்புல்லை பச்சையாக மென்று சாப்பிடலாம்.