கருப்பை, மாதவிடாய் பிரச்சனை, மலட்டுத் தன்மை போக்கும் யோகாசனம்
ஆரோக்கியம் நம் கையில் – 11
ஒரு ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும், அதன் ஆரோக்கியம், பண்புகள் எல்லாமே பெரும்பாலும் தாயைச் சார்ந்து தான் உள்ளது. நம் நாடு வளமான நாடாக சர்வதேச அளவில் வல்லரசாக அமைய வேண்டுமெனில் இந்திய நாட்டில் உள்ள எல்லா பெண்களின் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கு, கருப்பை முதலியவை சரியான முறையில் செயல்பட வேண்டும். மனதில் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும்.
மாத விலக்கு
மாத விலக்கு என்பது தடித்துப்போன எண்டோமெட்ரியம் வெளியேறுவதாகும். இதனால் கிழிக்கப்பட்ட ரத்த குழாய்களில் இருந்து ரத்தம் வருகிறது. இதன் விளைவாக மாதவிலக்கு ஒழுக்கு கருவாயான யோனி வழியாக வெளியேறுகிறது.
மாதவிலக்கின் ஆரம்ப நாளிலிருந்து அடுத்த மாதவிலக்கு துவங்கும் நாள்வரை மாதவிலக்கு சுழற்சி என அழைக்கப்படும். இந்த மாதவிலக்கு சுழற்சி 28 நாட்கள் கொண்டதாக இருக்கும். சிலருக்கு இந்தச்சுற்று 20 நாட்கள் அல்லது 35 நாட்கள் கூட நீடிக்கும். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும்.
இதில் மாதவிடாய் சுழற்சி சரியில்லையென்றால் கருப்பையிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் தவறான உணவினாலும் கீழ்க்கண்ட பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக ரத்தபோக்கு. இதற்கு காரணம் சினைப்பையில் உருவாகும் ஹார்மோன்களுக்கு இடையே போதிய சமநிலை இல்லாததாகும்.
மாதவிடாய் தள்ளிப்போதல், வயிற்றுவலி அதிகமாகும்.
கருப்பையில் கட்டி, கருமுட்டைப் பையில் நீர்கட்டிகள், வெள்ளைப்படுதல், குழந்தையின்மை, மலச்சிக்கல்.
பெண்களுக்கோர் அருமையான யோகா
பெண்கள் மேற்குறிப்பிட்ட பிரச்சனையிலிருந்து விடுதலையடைய ஓர் அழகான, அருமையான யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக வரும். கருப்பை பிரச்சனை வராது. மலட்டு தன்மை நீங்கும். செக்ஸ் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடலும், மனமும் வளமாக இருக்கும். நன்மக்களை சமுதாயத்திற்கு வழங்கலாம்.
பச்சிமோஸ்தாசனம் என்ற யோகாசனத்தை எல்லாப் பெண்களும் பயில வேண்டும். உங்கள் குழந்தைக்கு இதனை இளம் வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும். நிச்சயமாக வளர்ந்து பூப்பெய்தும் பொழுது உடலில் மாதவிடாய் சுழற்சி சம்பந்தமான பிரச்சனை வராது. கருப்பை பிரச்சனை வராது. திருமணமானால் சுகப்பிரசவம் நடக்கும். பிரசவித்தப் பின்னும் இதனை பயின்று இளமையுடன் வாழலாம்.
பச்சிமோஸ்தாசனம் செய்முறை:
- விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும்.
- கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து மடிக்காமல் தலைக்கு மேல் உயர்த்தவும்.
- மெதுவாக முன்னால் குனிந்து கால்களை மடிக்காமல் கால் விரல்களை தொட முயற்சிக்கவும்.
- இரு கைவிரல்களாலும் இரு கால்விரல்களை தொட முயற்சிக்கவும்.
- பின் கால் கட்டை விரல்களைப் பற்றி மேலும் குனிந்து நெற்றியை கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும்.
- மூச்சை வெளிவிட்டு குனிகிறோம். மூச்சை அடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும்.
- பின் மூச்சை வெளிவிட்டு கட்டை விரலை பிரித்து கைகளை நீட்டி மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காரவும்.
- இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும்.
முதலில் பயிற்சி செய்யும் பொழுது கால் விரலைத் தொடுவதே சிரமமாக இருக்கும். ஒரு மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். உங்களால் முழுமை நிலையினை அடைய முடியும்.
குறிப்பு:
அடி முதுகுவலி, முதுகுத் தண்டு கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்ய வேண்டாம். கல்லீரல், மண்ணீரல் வீக்கம், அல்சர் நோய் உள்ளவர்கள் யோகாசன வல்லுநரின் நேரடி ஆலோசனையின் படி பயற்சி செய்யவும்.
பச்சிமோஸ்தாசனத்தின் முக்கிய பலன்கள்:
- பெரும்பாலும் பெண்களுக்கு சிறுநீரகம் மற்றும் கருப்பை வழியாகவே வியாதிகள் தோன்றும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலமாக தங்கள் உடலில் பூரண ஆரோக்கியத்தை அடையலாம். கருப்பையில் தோன்றும் வியாதிகள் யாவும் சரியாகும்.
- பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அடிவயிற்று பெருக்கத்தை இந்த ஆசனம் சரி செய்துவிடும்.
- உடலுறவில் நாட்டமில்லாத மணமான பெண்கள் கணவனுக்குரிய சுகத்தை தர முடியாதவர்கள் இவ்வாசனம் செய்தால், அதற்குரிய ஹார்மோன்கள் சரியாக சுரக்கும். அதனால் செக்ஸ் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
- சிறு வயதிலிருந்து தொடர்ந்து செய்தால் 60 வயது ஆன பிறகும் தோல்களில் சுருக்கங்களோ, முடி நரைப்போ ஏற்படாது என்று யோக சாஸ்திரம் கூறுகின்றது.
- சிறுநீரகம் சம்மந்தமான குறைபாடுகள் நீங்கும்.
- தொடர்ந்து செய்தால் மஞ்சள் காமாலை, புற்றுநோய் வராது.
- நுரையீரல் பலப்படும். தசைவலி, வாதக்கோளாறுகள் நீங்கும்.
- பசியின்மை, நீரிழிவு, மலச்சிக்கல் நீங்கும்.
- நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகின்றது.
- ஆண்களுக்கு விந்து ஒழுக்கை தடுக்கும்.
- பெண்களின் எண்ணங்கள் திடப்படும். மனோதைரியம் கிடைக்கும். நேர்மையான எண்ணங்கள் பிறக்கும்.
இந்த ஆசனம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் ஆனந்த வாழ்க்கையையும் அளிக்க வல்லது. குறிப்பாக நாளைய சமுதாயத்தை வளப்படுத்தும் பெண்களுக்கு மிகச் சிறந்த ஆசனமாகும். குடும்பத்துடன் பயிலுங்கள். உங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே பழக்கி இன்புற்று வாழச் செய்யுங்கள்.