மனிதப் பிறவி மகத்தானது! பெரிய ஞானிகள் சொல்வார்கள், ‘அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் மனிதப் பிறவி மகத்தானது’ என்பர்.
சரி, ‘அர்த்தமுள்ள வாழ்வு’ என்றால் என்ன அர்த்தம்?
இந்த மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எந்த ஒரு நோயும் வரக்கூடாது. மனம் பக்குவப்பட வேண்டும். கோபம், கவலை, டென்ஷன், பொறாமை கூடாது. இந்த உடலைத் தாண்டி, மூச்சைத் தாண்டி, மனதைத் தாண்டி, புத்தியைத் தாண்டி, ‘நான் யார்?’ என்ற மெய்யுணர்வு, உயிரை உணரும் தன்மை பெற வேண்டும். இந்த ஊனுடலை, ஒளியுடல் ஆக்கி, பிறவாப் பெருநிலையடைய வேண்டும். இந்த நிலையை அடைவதே ‘அர்த்தமுள்ள வாழ்வு’. இதற்குத்தான் யோகக் கலை அவசியம் தேவை.
முதலில் உடல் ஆரோக்கியம் தேவை. அப்போது தான் மன அமைதி கிடைக்கும். உடலில் அதிக தசைகள் கூடாது. கொழுப்புக் கட்டிகள் சேரக்கூடாது. கை கால்கள், மூட்டுவலி வரக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்க வேண்டும். நிறைய யோகாசனங்கள் செய்ய பலருக்கும் நேரமில்லாமல் இருக்கலாம். ஆனால், அர்த்தமுள்ள வாழ்வு வாழ அர்த்தபாத பட்சிமோஸ்தாசனம் மட்டுமாவது செய்யுங்கள்.
அர்த்தபாத பட்சிமோஸ்தாசனம் செய்முறை:
- இரு கால்களையும் நேராக நீட்டவும்.
- இடது காலை மடித்து, வலது தொடையின் மீது வைக்கவும்.
- இடது கையை பின்புறமாக வளைத்து, இடது கால் பெருவிரலைப் பிடிக்கவும்.
- வலது கையின் ஆள்காட்டி விரலால் வலது கால் கட்டை விரலைப் பிடித்து, மூச்சை வெளியில் விட்டு, தலையை முழங்காலில் வைக்கவும்.
- இதே நிலையில் 10 எண்ணும் வரை இருந்து, பிறகு மெதுவாக நிமிரவும்.
- இதே போல் வலது புறமும் மாற்றி பயிற்சி செய்யவும்.
இந்த ஆசனத்தால் என்னென்ன பலன்?
மெல்லிய இடையை விரும்பும் பெண்கள் இந்த ஆசனம் செய்யுங்கள்.
பெண்கள் என்றாலே அவர்கள் உடலில் ‘உயிர் இயக்கம்’, அதாவது ரத்த ஓட்டம், மூச்சோட்டம், வெப்ப ஓட்டம் நன்றாக இயங்க வேண்டுமெனில் இடுப்பில் அதிக தசை அளவுக்கதிகமாக இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், மார்பு வலி, முதுகுவலி வரும். உடலில் முழுமையான ஆரோக்கியம் இருக்காது. இந்தக் காரணத்தால் தான் பெண்கள் இடை சிறுத்து இருக்க வேண்டும், அதுதான் அழகு என்றார்கள்! ‘இந்த அழகே உடல் ஆரோக்கியத்திற்கான அழகு’ என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆசனம், இடுப்பு தசையை மெலித்து, பெண்களை ஆரோக்கியமாகவும் அழகுடன் வாழ வழி செய்கிறது.
இடுப்புவலியை நீக்கும்
இடுப்புவலி இருந்தால் நீங்கும். பெண்கள் பயிற்சி செய்தால், எவ்வளவு வயதானாலும் அவர்களுக்கு இடுப்புவலி வராது.
ஜீரண மண்டலம் சிறப்பாகும்
இடுப்புப் பகுதி ஒடுக்கி அமுக்கப்படுவதால் குடல்கள், இரைப்பை நன்றாக இயங்கும். வயிறு உப்பிசம், பசியின்மை நீங்கும். இரைப்பையில் கழிவுகள் தங்காது.
நீரிழிவு வராது
கணையம் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும். அதனால் நீரிழிவு இருந்தால் பூரணமாக சரியாகும். அனைவரும் இந்த ஆசனம் பயிலுங்கள். எவ்வளவு வயதானாலும் நீரிழிவு வராது.
கல்லீரல் சுறுசுறுப்பாகும்
கல்லீரல் சக்தி பெற்று நன்றாக இயங்கும். பித்தநீரை கல்லீரல் அதிகளவு சுரப்பதால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது.
மலட்டுத்தன்மை நீங்கும்
பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை நீக்கி, புத்திர பாக்கியத்தைக் கொடுக்கிறது. கர்ப்பப்பையும் சக்தி பெற்று நன்றாக இயங்கும்.
மூலம் வராது
‘மூலம்’ நன்கு குணமாகும். மலச்சிக்கல் வராது. இளம் வயதிலேயே பயின்று தினமும் செய்து வந்தால், பிற்காலத்தில் எவ்வளவு வயதானாலும் ரத்த மூலம், உள் மூலம், வெளிமூலம், மூலக்கடுப்பு உள்ளிட்டவை வரவே வராது.
வயிற்றுவலி வராது
வயிற்றுவலி வராது. மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக வயிற்றுவலி வராது.
ரத்தசோகை இல்லாமல் போகும்
இன்று நிறைய பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ‘ரத்தசோகை’ ஏற்படுகிறது. இந்த ஆசனம் செய்தால், ரத்தசோகையிலிருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.
நரம்பு பலவீனம் சரியாகும்
இந்த ஆசனமானது நரம்பு பலவீனத்தை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது. கை நடுக்கம், விரல் நுனி வலி, விரல்கள் நடுக்கம் முதலியவையும் சரியாகும்.
வாயுப்பிடிப்பு இல்லாமல் போகும்
வாயுப் பிடிப்பால் சிலருக்கு முதுகு குனிந்து, நிமிர முடியாமல் போகும். அதற்கு இந்த ஆசனம் முற்றுப்புள்ளி வைக்கிறது. அனைவரும் இந்த ஆசனம் செய்யுங்கள். எவ்வளவு வயதானாலும் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் நலமாக வாழலாம்.
என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்?
- ‘மிளகாய் காரம் மனிதனுக்கு ஆகாது. மிளகுக்காரம் விருந்துணவைக் கூட பஸ்பமாக்கிடும்’. அதனால், உணவில் காரத்திற்கு மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்துக்கொள்ளுங்கள்.
- பேரீட்சை, உலர் திராட்சை, அத்தி ஆகியவற்றை நன்றாகக் கழுவி தினமும் தலா மூன்று எண்ணிக்கையில் சாப்பிடுங்கள்.
- நெல்லி, வெள்ளரி, கேரட், முள்ளங்கியை தோலுடனேயே உணவில் சேர்த்துச் சாப்பிடலாம்.
- மாதுளை, வாழைப்பழம், நாவல்பழத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
- வேர்க்கடலை சாப்பிடுங்கள். புத்துணர்வு கிடைக்கும்.
- கறுப்பு உளுந்தை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து, ஈரத்துணியில் கட்டித் தொங்கவிட்டால், 12 மணி நேரத்தில் வெள்ளை முளை கிளம்பி வரும். இதை உண்டால் மிகவும் நல்லது. உஷ்ணம் நீங்கும். பிள்ளைப் பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மெலிவாக உள்ளவர்கள் புஷ்டியாகலாம்.