நலம் தரும் நாற்காலி யோகா
சைனஸூம் ஆஸ்துமாவும் ஓடியே போகும்! லிங்க முத்திரை
ஒரு கூட்டத்தின் மத்தியில் போய் நின்று, ‘உங்களில் யாருக்கெல்லாம் ஆஸ்துமாவோ சைனஸ் பிரச்சனையோ இருக்கிறது?’ என்று கேட்டுப் பாருங்கள். அநேகமாக பாதிக்குப் பாதி பேர் கை தூக்குவார்கள். ஆம், ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற பேதமின்றி ஆஸ்துமா மற்றும் சைனஸால் பாதிக்கப்படுவோர் அநேகர்! அதற்காக, பலவகையான மருந்துகள், சிகிச்சைகள் மேற்கொண்டும், முழுமையான தீர்வு கிடைக்காமல் பலரும் வாடுகிறார்கள்.
இதற்கு எளிமையாக ஒரு தீர்வு நீங்கள் காணலாம்! அதுவும் நாற்காலியில் அமர்ந்தபடியே!! நமது உடலையும் உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளையும் பயன்படுத்தி, எளிமையான ‘லிங்க முத்திரை’ யின் மூலமே இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப் போகிறோம். அதற்கு முன்பாக, நமது உடல் இயக்கத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா….
மனித உடலில் நுரையீரலின் பங்கு…..
நம்முடைய மார்புக்கூட்டுக்குள் இடது பக்கம் ஒன்று, வலது பக்கம் ஒன்று என இரு நுரையீரல்கள் உள்ளன. மூக்கின் வழியாக நாம் இழுக்கும் காற்றானது, காற்றுக் குழாய்கள் இருக்கும் மார்புப் பகுதிக்கு தொண்டை வழியாகச் செல்லும். இந்த காற்றுக் குழாயானது இரண்டாகப் பிரிந்து, இரண்டு பக்க நுரையீரலுக்குள் செல்லும். நுரையீரலுக்குள் நுழைந்ததும், மூச்சுக் குழாய்கள் ஒவ்வொன்றும் பல கிளைகளாகப் பிரியும். மூச்சுக் குழாயிலிருந்து ஏராளமான சின்னச் சின்ன அறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் காற்றை உள்ளிழுக்கும் போது பிராண வாயுவை எடுத்துக் கொண்டு, கரியமில வாயுவை சுவாசம் மூலம் வெளியேற்றுவதே நுரையீரலின் பிரதான வேலையாகும்.
சுவாசக் குழாய்களின் உட்சுவர் பல காரணங்களால் காயப்படும்போது, சுவாசக்குழாய் சுருங்குகிறது. அதன் குறுக்களவு குறைவதால், சுவாசிக்கும் காற்றுக்குத் தடை ஏற்படுகிறது. அதனால் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படும். ‘வீசிங்’ என்று சொல்லப்படும் ஒருவித சப்தமும் ஏற்படும். மார்பை இறுக்கிப் பிடிப்பது மாதிரியான உணர்வு, இருமல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொடர் தும்மல் உள்ளிட்டவையும் ஏற்படும்.
இந்த ஆஸ்துமாவானது, ஆண் / பெண் என அனைவருக்கும் வருகிறது. அதிலும் குறிப்பாக, மழை, குளர்காலங்களில் மிகவும் அதிகமாக பாதிக்கிறது.
இதுவரையில் துன்பத்திற்கு உள்ளானவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகப் பயிற்சிகளை நம்பிக்கையுடன் பயிலுங்கள். ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு, சளித்தொல்லை இல்லாமல் வளமாக வாழுங்கள்!
லிங்க முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- கண்களை மூடி, மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இப்படி 10 முறை செய்யவும்.
- பின்னர் இரண்டு கை விரல்களையும் கோர்த்து, இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும் (படத்தைப் பாருங்கள்).
- பிறகு கண்களை மூடி, இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்.
- இப்படியே 2 நிமிடம் இருக்கவும்.
- பிறகு கண்களைத் திறந்து, கைகளை சாதாரண நிலைக்குக் கொண்டு வரவும்.
- இப்படி தினமும் மூன்று முறை, சாப்பிடுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
- ஆஸ்துமா / சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மட்டும், தினமும் மூன்று வேளையும் தலா 5 நிமிடம் பயிற்சி செய்யவும்.
பயிற்சி – 2
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டவும். (படத்தைப் பாருங்கள்).
- இப்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே இரு கைகளையும் முன்புறமாக சேர்த்து, படத்தில் உள்ளது போல இணைக்கவும்.
- பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மீண்டும் பக்கவாட்டில் வைக்கவும்.
- இதேபோல் 10 முறை பொறுமையாக பயிற்சி செய்யவும்.
- ஐந்து முறை பயிற்சி செய்து விட்டு, ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
- பிறகு மீண்டும் 5 முறை பயிற்சி செய்யவும்.
இந்தப் பயிற்சியால் நுரையீரலுக்கு சக்தி கிடைத்து, நன்றாக இயங்கும். நுரையீரலில் உள்ள ஏராளமான காற்று முடிச்சுகளில் நிரம்பியிருக்கும் கரியமிலவாயு வெளியேறும். சுத்தமான காற்றை நுரையீரலும் உள்வாங்கும்!
பயிற்சி – 3
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காருங்கள்.
- கண்களை மூடி, இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கவனியுங்கள்.
- பிறகு மூச்சை மெதுவாக உள்ளே இழுத்துக் கொண்டே இரு கைகளையும் உயர்த்தி, தலைக்கு மேலே கும்பிட்ட நிலையில் வைக்கவும்.
- இப்படியே 10 முதல் 20 விநாடிகள் சாதாரண மூச்சோட்டத்தில் இருக்கவும்.
- பிறகு மெதுவாக கைகளை கீழே கொண்டு வரவும்.
- இப்படி 3 முதல் 5 முறை செய்யவும்.
மேற்காணும் மூன்று பயிற்சிகளை செய்வதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்….
- மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா நீங்கும்.
- தைமஸ் சுரப்பி மற்றும் இதயம் நன்றாக இயங்கும்.
- சுறுசுறுப்பாக வாழலாம்.
- மூச்சுத் திணறல் நீங்கும்.
- முதுகுவலி, கழுத்துவலி சரியாகும்.
- தோள்பட்டை வலி நீங்கும்.
- தலைவலியும், தலைபாரமும் குறையும்.
- இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா முதலில் கட்டுக்குள் வரும். பிறகு அறவே நீங்கும்.
- இந்த மூன்று பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருபவருக்கு எவ்வளவு வயதானாலும் ஆஸ்துமா வராது.
ஆஸ்துமா வருவதைத் தடுக்க, பயிற்சிகள் செய்வதுடன் என்னென்ன சாப்பிடணும்?
கோடைக் காலத்தில்:
- பழங்கள்: சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை, பலாப்பழம், ஆப்பிள், உலர் திராட்சை, வறுக்காத பாதாம்.
- தானியங்கள்: கோதுமை, கொண்டைக்கடலை, கொள்ளு, பச்சைப்பயறு.
- காய்கறிகள்: முருங்கை, பூண்டு, வெங்காயம், கருணை, அவரைக்காய், முட்டைக்கோஸ்.
- கீரைகள்: ஆடாதொடா, அதிமதுரம், கொத்துமல்லித்தழை, புதினா, அருகம்புல்.
மழைக்காலத்தில்:
சுக்குமல்லி காபி, சத்துமாவு பானங்கள், சூடான காய்கறி சூப், கேழ்வரகு & கம்பு தோசை, தூதுவளை தோசை, புதினா சட்னி, வேகவைத்த உணவுகள். தவிர, தண்ணீரை சுடவைத்து அதில் சீரகம், மிளகுத்தூள் கலந்து குடிக்கலாம். குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்க்ரீம்களை அறவே தவிர்க்கவும்.
அருகே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளுடன் உணவிலும் கவனம் செலுத்தி வாருங்கள். ஆஸ்துமாவும், சைனஸூம் உங்களை விட்டு ஓடியே போகும்!!