நலம் தரும் நாற்காலி யோகா
தலைமுடி கொட்டாமலிருக்க நம் கையில் முத்திரை இருக்கு!!
இன்று மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது, தலைமுடி உதிர்வதும், வழுக்கை விழுவதும்! இன்று ஆண்களுக்கு மட்டுமல்ல…. பெண்களுக்கும் முடி உதிர்வு அதிகமாகி, வழுக்கை விழுவது அதிகமாகி வருகிறது.
உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்! ஆனால், இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு நம் விரல்களிலேயே யோகமுத்திரை வடிவத்தில் ஒரு எளிமையான தீர்வு இருக்கிறது. அதற்கு முன்பாக முடி எதனால் கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதிலிருந்து விடுபட யோக நெறிகளை தெரிந்து புரிந்து பயிற்சி செய்து, அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம்.
முடி உதிர்வுக்கான காரணங்கள்…..
பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை ஜெயிக்க முடியும். ஆம், பரம்பரையாக செய்த சில தவறுகளை முத்திரைகள் மூலமே சரி செய்ய முடியும்.
உடல் சூடு
உடலில் அதிகமான உஷ்ணம் காரணமாக பிட்யூட்டரி, பீனியல் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல், அதில் சில குறைபாடுகள் ஏற்படுவதால் முடி கொட்டுகிறது.
அதிக சிந்தனை
தொடர்ந்து காலை முதல் இரவு வரை அதிகமாக சிந்தித்த வண்ணம் இருப்பவர்களுக்கு முடி கொட்டும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்களின் தலை முடி முழுக்கக் கொட்டி, வழுக்கையாகத்தான் இருக்கும். இவர்கள் தொடர்ந்து மூளைக்கு அதிக வேலை கொடுப்பதால் மூளை நரம்புகள் கொதிப்படைந்து இப்படி நிகழ்கிறது.
தூக்கமின்மை
பலருக்கும் ஆழ்ந்த நித்திரை இருக்காது. அதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நரம்பு பலவீனம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் முடி கொட்டும். உதிர்ந்த முடியானது வளராமல் இருக்கும்.
உணவு
நாம் சாப்பிடும் உணவு மிகவும் காரமாக இருந்தாலோ, எண்ணெய்ப் பண்டங்கள் அதிகமாக எடுத்தாலோ, மாமிசம் அதிகமாக உட்கொண்டாலோ, உடலில் நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. இதனால் முடி கொட்டக்கூடிய நிலை ஏற்படுகிறது.
பகல் தூக்கம்
பகலில் சாப்பிட்டதும் பலருக்கும் தூங்குவது வழக்கம். இதனாலும் முடி கொட்டும்.
அதேபோல் கணவன் / மனைவி அளவுக்கு மீறி அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் சுரப்பிகளில் மாறுபாடு ஏற்பட்டு, முடி கொட்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
ஆண்கள் வாரம் ஒருமுறை சனி / புதனும், பெண்கள் செவ்வாய் / வெள்ளியும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்படிக் குளிக்காதவர்களுக்கு உடல் மற்றும் மன உஷ்ணத்தினால் சுரப்பிகள் சரியாக சுரக்காமல் முடி கொட்ட ஆரம்பிக்கும்.
குளிக்கும் தண்ணீர்
உப்புத் தண்ணீரில் தொடர்ந்து குளிப்பதாலோ, அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் தண்ணீரை மாற்றி மாற்றி குளிப்பதாலோ அவர்களின் உடலில் சுரப்பிகளின் மாற்றத்தால் தலைமுடி கொட்டும்.
மேற்காணும் காரணங்களால் ஒருவருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய, இரண்டு விதமான முத்திரைகள் உள்ளன. அவற்றை தினமும் பயிற்சி செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்!
பிரசன்ன முத்திரை செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, முதுகெலும்பை நேராக வைக்கவும்.
- பிறகு மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- இப்படி ஒரு நிமிடம் செய்யவும்.
- பிறகு இரு கை விரல்களை மடித்து, கட்டை விரல்களை மட்டும் ஒன்றோடொன்று தொடும்படி வைக்கவும். (படத்தைப் பாருங்கள்).
- இதே நிலையில் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும்.
- பிறகு ஒரு நிமிடம் இரண்டு கை விரல்களிலும் ஒன்றோடொன்று உராய்வு கொடுக்கவும்.
- இதை காலை / மதியம் / மாலை என மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக பயிற்சி செய்யுங்கள்.
லிங்க முத்திரை செய்முறை:
- பிரசன்ன முத்திரை செய்ததும் ‘லிங்க முத்திரை’ யை பயிற்சி செய்ய வேண்டும். இது உடலில் உள்ள அதிக உஷ்ணத்தை குறைக்கும்!
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி, இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும்.
- பிறகு கைவிரல்களை கோர்த்துக் கொண்டு, இடது கை கட்டை விரலை மட்டும் மேல் நோக்கியவாறு வைக்கவும் (படத்தைப் பாருங்கள்).
- மற்ற விரல்களில் லேசான அழுத்தம் கொடுக்கவும்.
- இதே நிலையில் சாதாரண மூச்சில் 2 நிமிடம் இருக்கவும்.
- காலை / மதியம் / மாலை சாப்பிடுவதற்கு முன்பாக இந்தப் பயிற்சியை 2 நிமிடம் செய்யவும்.
உணவு முறை எப்படி?
இந்த இரு முத்திரைகளுடன் கீழ்க்காணும் உணவுமுறையை கடைப்பிடிக்கவும்.
- தினசரி உணவில் முருங்கைக்கீரையை ஒரு கரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும்.
- கரிசலாங்கண்ணி கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்க்கவும்.
- உலர்ந்த திராட்சை, கருப்பு திராட்சையை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளவும்.
- கேரட், முட்டைக்கோஸை உணவுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
- வாரம் மூன்று நாட்கள் கொய்யாப்பழம் சாப்பிடுங்கள். 15 தினங்களுக்கு ஒருமுறை மாதுளம்பழம் சாப்பிடுங்கள்.
- சின்ன வெங்காயம், கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
- வாரம் ஒருமுறை இரண்டு பல் பூண்டை எண்ணெயில் வதக்கி சாப்பிடவும்.
இந்த முத்திரைகளால் கிடைக்கும் மற்ற பலன்கள்…….
- தலைமுடி வளர்வதற்கு இன்று பலவிதமான ரசாயனங்கள் கலந்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் பலருக்கும் தோல் வியாதி, தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. நாம் நமது பண்புகளில் மாற்றம் செய்தாலே எந்தவித மருந்தும் எடுக்காமலேயே நல்ல மாற்றம் நிகழும்.
- உங்களுடைய பண்புகள் மாறும். முடி உதிர்வது தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, முடி கருப்பாகவும், பளபளப்புடனும் வளரும்.
- நுரையீரல் நன்றாக இயங்கும். ஆஸ்துமா வரவே வராது. மன இறுக்கம் நீங்கும். சளி, மூக்கடைப்பு சரியாகும்.
- எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடற்சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி நீங்கும்.
- உடலில் பஞ்சபூதத் தன்மை சமமாக இயங்கும்.
- இந்த இரு முத்திரைகளையும் ஒரு மண்டலம் பயிற்சி செய்தால், உடலில் நல்ல முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம்.