27
Sep
மன அமைதி வேண்டுமா – துவிகோணாசனம் செய்யுங்கள்
வாழ்வில் மனிதர்களுக்கு இன்பமும் வரலாம், துன்பமும் வரலாம். பொருளாதாரத்தில் உயர்வும் வரலாம், தாழ்வும் வரலாம். இது சகஜம். எந்த ஒரு சூழலையும் தாண்டி செல்ல நமது உடல் ஆரோக்கியமாகவும் மனம் அமைதியாகவும் கடைசிவரை இருக்க வேண்டும். வாழ்வில் ஏற்ற இறக்க சூழ்நிலைகளில் அதனை எதிர் கொண்டு சமாளிக்க இந்த உடலும் மனமும் மிக முக்கியம்.
உடலில் பல நோய்கள் இருந்து உடல் துயரப் பட்டு மனமும் அதனால் துயரப் பட்டிருந்தால் வாழ்வில் வரும் பல பிரச்சனைகளை நம்மால் சமாளிக்கவே முடியாது. எனவே உடலையும் மனதையும் துயரப்படாமல் வைத்திருக்கும் கலையான யோகக் கலையை முதலில் தினமும் பயிலுங்கள். அதனை பயின்றால் உடல் உறுதியாகும். உடல் உள் உறுப்புக்கள் நன்றாக இயங்கும். மனமும் சஞ்சலம் நீங்கி திடமாகும். உடலும் மனமும் திடமானால் வாழ்வில் வேறு எந்த துயர் வந்தாலும் அதனை எளிதில் சமாளித்து வெற்றி காணலாம்.
எனவே இதுவரை உடலிலும் மனதிலும் பல துயர்களை அனுபவித்தவர்கள் துயர் நீக்கும் துவிகோணாசனம் செய்யுங்கள். தினமும் காலையும் மாலையும் பத்து நிமிடம் செய்யுங்கள் துயரில்லா வாழ்வு வாழுங்கள்.
துவிகோணாசனம் செய்யும்முறை:
- விரிப்பில் இருகால்களையும் ஒரு அடி அகற்றி நிற்கவும்.
- இரு கைகளையும் ஒன்றாக பிணைந்து தலைக்கு மேலே உயர்த்தவும்.
- இப்போது மூச்சை வெளியில் விட்டு கொண்டே மெதுவாகக் குனியவும்.
- சேர்த்த இரு கைகளையும் படத்தில் உள்ளதை போல் முதுகுக்குக்கு பின்புறமாக கொண்டு வந்து நேராக வைக்கவும்.
- இந்த நிலையில் பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும்.
- பிறகு மெதுவாகக் கைகளை விடுவித்து நேராக நிமிர்ந்து நிற்கவும்.
- பிறகு மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- மேற்சொன்ன முறையில் இரண்டு அல்லது மூன்று முறை காலையும் மாலையும் பொறுமையாக பயிற்சி செய்யவும்.
முக்கிய குறிப்பு:
முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டோர் இந்த ஆசனம் செய்ய வேண்டாம். மற்ற அனைவரும் இந்த ஆசனத்தை நிதானமாக செய்யவும். ஓரிரு மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் முழுமையான நிலையை அடையலாம்.
துவிகோணாசனம் செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன:
- முதுகு வலி போகும்
- இந்த ஆசனம் முதுகு வலியை விரட்டுகிறது. முதுகெலும்பை திடப்படுத்துகிறது.
- கழுத்து வலி வராது
- இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால் கழுத்துவலி வரவே வராது. தவிர கழுத்துவலி உள்ளவர்கள் பயிற்சி செய்தால் விரைவில் சரியாகும்.
- தோள்பட்டை வலி நீங்கும்
- சிலருக்கு தோள்பட்டை இறங்கியிருந்தால் அது சரியாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகிய உடல் தோற்றம் கிடைக்கும். தோள்பட்டை வலி நீங்கும்.
- பெண்களின் தேக அழகு கூடும்
- பெண்களின் உடல் அமைப்பு அழகாகவும் வசீகரமாகவும் அமையும். உடலில் தேவையற்ற தசைகள் இருந்தால், அவை பக்க விளைவிகளின்றி குறையும். மார்பு தசைகள் மிக அதிகமாக இருப்பவர்கள் இந்த ஆசனம் செய்தால் அதிக கொழுப்பு நிறைந்த அந்த தசைகள் விரைவிலேயே கரைந்து அழகான தோற்றம் கிடைக்கும். மார்பில் கட்டிகளும் மார்பக புற்றுநோய் வராது. உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.
- குடல் சுத்தமாகும்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும். கைவலி சரியாகும்.
- தொந்தி குறையும்
- அதிகமாக தொந்தி உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் அதிக வயிற்று சதை விரைவிலேயே குறையும். அழகான தோற்றமும் உண்டாகும்.
- பெண்களின் ஹெல்த் பிரச்சனை தீரும்
- இளம் பெண்கள் இந்த ஆசனம் செய்து வந்தால், திருமணம் ஆன பிறகு, அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் தான். இந்த ஆசனமானது கர்பப்பையை திடப்படுத்தும். நீர்க்கட்டிகள் ஏதேனும் இருந்தால் விரைவில் கரையும். மாதவிடாய் நாள் தள்ளிப்போதல், அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்டவை சரியாகும். மன இருக்கம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
- மலச்சிக்கல் சரியாகும்
- மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் காலை மாலை என இருவேளையும் இந்த ஆசனம் செய்து வந்தால் சரியாகி விடும்.
- பாத வலி நீங்கும்
- பாத வலி, மூட்டு வலி, குதிகால் வீக்கம், காலில் நீர்க்கட்டுதல் உள்ளிட்டவை குணமாகும்.
- சுறுசுறுப்பு அதிகரிக்கும்
- உடலில் வயிற்று பகுதி, மார்பு பகுதியிலுள்ள அசுத்த காற்று முழுவதும் வெளியேறும். இதனால் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
- பசியின்மை நீங்கும்
- கல்லீரலுக்கும் மண்ணீரலுக்கும் ரத்தம் சீராக பாயும். நன்றாக பசி எடுக்கும். பசியில்லாமல் வயிறு உப்புசமாக உள்ளவர்கள். இந்த ஆசனத்தை செய்தல் நன்றாக பசி எடுக்கும்.
இந்த ஆசனத்துடன் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்:
- உணவுடன் பசு நெய் அடிக்கடி சேர்க்கவும்.
- வெண்பூசணி, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, கொத்துமல்லித்தழை மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தக்காளி பழம், கொய்யா பழம் இரண்டையும் அடிக்கடி சாப்பிடுங்கள்.
- இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு வாரம் ஒரு முறை காலையில் அருந்துங்கள்.
- வாரம் ஒரு முறை உணவில் வாழைப்பூ சேருங்கள்.
- மாதம் ஒரு நாள் வேப்பம்பூவை சாம்பார் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து உண்ணுங்கள்.
- அவரைக்காய், வாழை பிஞ்சு, வெண்டைக்காய், முள்ளங்கி, கேரட், வெள்ளரி, முருங்கைக்காய் உணவில் அடிக்கடி சேருங்கள்.
துவிகோணாசனத்தை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யுங்கள். மேற்குறிப்பிட்ட உணவு எடுத்து கொள்ளுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் மன அமைதியும் கிடைக்கும். நல்ல எண்ணங்கள் உதயமாகும். கோபம், சலிப்புத்தன்மை, சஞ்சலம், பொறாமை உள்ளிட்டவை நீங்கும். எதையும் தாங்கும் இதயத்துடன் நீங்கள் வளம் வருவீர்கள்.