25
Sep
ஆரோக்கியம் நம் கையில் – 003
அந்த காலத்தில் 80 வயது ஆனவுடன் தான், வயதாகிவிட்டது, மூட்டுக்கள் தேய்ந்து விட்டது, மூட்டுவலி உள்ளது, உட்கார முடியவில்லை, உட்கார்ந்தால் எழ முடியவில்லை என்று கூறுவார்கள். ஆனால் இன்று 8 வயதிலேயே மூட்டுவலி உள்ளது என்று சிறியவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சை வரை செல்லும் அவல நிலையைக் காண்கிறோம்.
உடலில் உள்ள எந்த ஒரு மூட்டிலும் ஏற்படுவது மூட்டுவலி. நாம் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படுகின்ற வலியை மூட்டுவலி என்று கூறுகின்றோம். நமது உடலில் உள்ள அசையும் மூட்டுக்களில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு.
முதலில் மூட்டு வலியின் வகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு வரும் மூட்டுவலி – இதில் ரிக்கட்ஸ் நோய், போலியோ என இருவகை உள்ளது.
ரிக்கட்ஸ் மூட்டுவலி
ரிக்கட்ஸ் வரக் காரணம் மனித உடலுக்குத் தேவையான சூரிய வெளிச்சம் கிடைக்காதது தான். இன்று எல்லாக் குடும்பங்களும் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்ஸ்ஸில் சொகுசாக குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அலுவலகம் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு கூட்டிச் செல்ல A/C கார். படிக்கும் பள்ளிகளிலும் இன்று A/C வந்துவிட்டது. சிறு குழந்தைகளுக்கு பேண்ட், சர்ட், ஷீ, டை, இறுக்கமான உடை, வீட்டிற்குள்ளும் சூரிய வெளிச்ச கதிர் படுவதில்லை. வெளியிலும் படுவதில்லை. ஏன் இன்றைய குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் சூரியன் எங்குள்ளது என்றே அநேக நபர்களுக்கு தெரியாது. செல்போனும், இன்டர்நெட்டும் பார்க்க நேரமில்லை. இதில் சூரியனை யார் பார்ப்பது என்று வாழ்வதால் குழந்தைகளின் மூட்டுக்களில் சூரிய ஒளி படாததால் மூட்டில் உள்ள சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் ஒழுங்காக சுரக்காமல் சிறுவர்களுக்கு மூட்டுவலி வருகின்றது.
மேலும் உடலுக்குத் தேவையான கால்சியம் பற்றாக்குறை, வைட்டமின் – டி பற்றாக்குறையால் ரிக்கட்ஸ் என்ற மூட்டுவலி குழந்தைகளுக்கு ஏற்படும்.
ரிக்கட்ஸ் மூட்டுவலி வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்
பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள்/மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
போலியோ
போலியோ வைரஸ் என்ற கிருமி தாக்குவதால் முதுகுத்தண்டிலுள்ள நரம்புகளை பாதிக்கச் செய்கின்றது. அதனால் கைகள், கால்கள் வலுவிழந்து விடுகின்றது. மூட்டுவலி வருகின்றது.
மூட்டுவலி – தேய்மானம் வகைகள்
ஜீவனனால் ஆர்த்தரைட்டீஸ், கிருமிகளால் ஏற்படும் ஆர்த்தரைட்டடீஸ், ருமேட்டிக் ஜீரம், இரத்தக் கோளாறால் ஏற்படும் ஆர்த்தரைட்டீஸ், இரத்த புற்றுநோய்.
வயதானவர்களுக்கு வரும் மூட்டுவலி
வயதானவர்களுக்கு மூன்று முக்கிய மூட்டு தேய்மானங்கள் ஏற்படுகின்றனன.
ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ்
ஆஸ்டியோ என்றால் எலும்பு என்று பொருள். மூட்டுக்களில் இருக்கும் எலும்புகள் தேய்ந்துவிட்டால் அதற்கு ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ் என்று பெயர். இவ்வகை தேய்மானம் வந்தால், நடப்பதற்கும், உட்கார்ந்து எழுவதற்கும் மிகவும் கஷ்டமாகயிருக்கும். நடந்தால் மூட்டுக்களில் வலி, மூட்டுவலியால் இரவு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ்
இந்த ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ் எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். மூட்டு, மணிக்கட்டு, கை கால் விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுக்களில் இந்த நோயின் பாதிப்பு இருக்கும்.
உடலில் உள்ள மூட்டுக்கள், மணிக்கட்டில் விரல்களில் வீக்கம் ஏற்பட்டு இறுக்கிப் பிடிப்பது போல் இருந்தால் அது ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ்ஸின் அறிகுறியாகும்.
எலும்பு தேய்மானம்
வயதானவர்களுக்கு, குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களை இந்நோய் தாக்குகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுகின்றது. மெனொபாஸ், முதுமை, வேலை எதுவும் செய்யாமல் எப்பொழுதும் சோர்வாக இருத்தல் போன்ற காரணங்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
மூட்டுவலிக்கு முக்கிய காரணங்கள்
அதிக எடை, மூட்டுத் தேய்மானம், கால்சியம் பற்றாக்குறை, இரத்தசோகை, அஜீரணத் தொல்லை, வாயுத்தொல்லை, எந்த உடற்பயிற்சியும் செய்யாதிருத்தல், சத்தான உணவு உண்ணாமலிருத்தல், அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்.
மூட்டு வலி என்றால் என்ன? எதனால் ஏற்படுகின்றது. அதன் வகைகள் பற்றி தெரிந்ததால், நீங்கள் எந்த வகையில் இருக்கின்றீர்கள் என்பதை முதலில் உணரலாம். இனி கவலையை விடுங்கள். மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எளிமையான யோகாசனங்கள், உணவு வகைகள் மூலம் நாம் நலமாக வாழும் வழியினைப் பார்ப்போம்.
யோகாசனங்கள்
நம் சித்தர்கள் அளித்த யோகக்கலைகள் மனித உடலை வளப்படுத்தும், நலம் சேர்க்கும். மனதில் அமைதி கிடைக்கும். உடலில் உள்ள நரம்பு மண்டலம், மூச்சோட்ட மண்டலம், ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கச் செய்கின்றது. யோகாசனங்கள் செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறுகின்றது. தச வாயுக்களும் சரியாக இயங்கச் செய்யும். யோகாசனம் செய்தால், மலச்சிக்கல் வராது. யோகாசனம் செய்யாதவர்களுக்கு மலச்சிக்கல் வரும். கழிவுகள் ஒழுங்காக வெளியேறாது. அதனால் கழிவுகளின் அசுத்தக்காற்று மூட்டுக்களில் வாயுவாக செயல்பட்டு மூட்டின் இயக்கத்தைப் பாதிக்கும்.
யோகாசனங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களையும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது. நமது மூட்டுக்களை சிறப்பாக இயங்கச் செய்ய எளிமையான யோகாசனங்கள் உள்ளன. அதனை தினமும் காலை/மாலை செய்தால் மூட்டுவலி ஓடிவிடும்.
உட்கட்டாசனம் செய்முறை
- விரிப்பில் கிழக்கு நோக்கி நேராக நிற்கவும்.
- இரு கால் பாதங்களும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- இரு கைகளையும் ஒரு அடி அகலத்தில் முன்னால் நீட்டவும். கை விரல்கள் வானத்தைப் பார்த்திருக்கட்டும்.
- மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்வது போல் மெதுவாக உடலை கீழே கொண்டு வரவும்.
- சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும்.
- உங்கள் உடல் எடை முழுவதும் குதிகாலில் கொடுக்கவும்.
- பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.
- இதுபோல் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.
உட்கட்டாசனம் பலன்கள்
- இரு கால் மூட்டுக்களுக்கும் நல்ல இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் கிடைக்கின்றது.
- மூட்டுகள் நன்கு பலப்படுகின்றது.
- மூட்டை சுற்றியிருக்கின்ற சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி சரியான அளவு சுரக்கும்.
- அலுவலகத்தில் ஒரு இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், இந்த ஆசனத்தை செய்யும் பொழுது இரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும்.
- மூட்டுவலி இருந்தால் படிப்படியாகக் குறைந்துவிடும். மூட்டுவலி இல்லை என்றால் பிற்காலகட்டத்தில் மூட்டுவலி வராமல் தடுக்கப்படுகின்றது.
- இந்த உட்கட்டாசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருந்தால், மூன்று மணி நேரம் நடைபயிற்சி (Walking) மேற்கொண்டால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் இந்த ஒரு ஆசனத்தில் கிடைக்கும்.
- மூட்டில் நீர் தேங்கல், வலி, வாதம் நீங்கும்.
யார் செய்யலாம்?
சிறுவர் முதல் பெரியவர் வரை உட்கட்டாசனத்தை செய்யலாம். மிகுந்த பலன் கிடைக்கும்.
யார் செய்யக்கூடாது?
மூட்டில் அறுவை சிகிச்சை செய்து நான்கு மாதங்கள் முடியாத காலத்தில் உள்ளவர்கள், மூட்டில் அதிகமான வீக்கம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம்.
வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு அன்பான வேண்டுகோள்
பெண்கள் அவசியம் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். காரணம் மூட்டுவலி நிறைய குடும்பப் பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு, குழந்தை பிறந்தவுடன் வருகின்றது. பெண்கள் காலை / மதியம் / மாலை என மூன்று வேளை பயிற்சி செய்யுங்கள். மூட்டு வலியும் மறையும். சுறுசுறுப்பாக வாழலாம். உங்கள் கணவன், உங்கள் மகன் / மகள்/ சகோதரர்கள் / தாய் / தந்தை காலை எழுந்தவுடன் பல் துலக்கி காலை கடன்களை முடித்து விட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் உங்கள் இல்லத்தில் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யுங்கள். வீட்டில் அனைவரும் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போல், உடல் ஆரோக்கியத்திற்காக பயிற்சி செய்யுங்கள். இந்த உட்கட்டாசனம் மூட்டு வலியை மட்டும் போக்குவதில்லை. இதனுடைய மற்ற பலன்கள் என்ன தெரியுமா?
உட்கட்டாசனம் மற்ற பலன்கள்
- தோள் பட்டைகளில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்கும்.
- கால் பாதவலி நீக்கி கால்களுக்கு வலிமை தரும்.
- இதயம் வலுப்பெறும். காரணம் உதரவிதானம் மேல் நோக்கி உயர்த்தப்படுவதால்
- பெண்களுக்கு வரும் இடுப்புவலி நீங்கும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் வரும் அதிகமான இடுப்புவலி நீங்கும்.
- இடது, வலது கால்களில் சம அளவு உடல் பாரம் செலுத்தப்படுவதால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.
- பெண்கள் இளம் வயதிலேயே இந்த ஆசனத்தை செய்தால் திருமணத்திற்கு பின் சுகப்பிரசவம் நடைபெறும்.
- மூட்டுவாதம், அஜீரணம் வராது.
மூட்டுவலி உள்ளவர்கள் உணவு வகை
- தங்களது உணவில் தினமும் 5 வெண்டைக்காய்கள் பச்சையாக கழுவி நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும்.
- பூண்டு, வெங்காயம் உணவில் அதிகம் சேர்க்கவும். இதில் கந்தகச் சத்து அதிகம் உள்ளது.
மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களால் தேய்மானம் அடைந்த எலும்புகள், இணைப்புத் திசுக்கள் வலுப்பெறும்.
அன்னாச்சிப்பழம்
அன்னாச்சிப்பழத்திலுள்ள BROMELIAN எனும் சத்து மூட்டு அழற்சியைக் குறைக்கும் தன்மையுடையது. எனவே அப்பழத்தினை அதிகம் சேர்க்கவும்.
வைட்டமின் C சத்தும் மூட்டுவலியும்
உணவில், பழங்களில் வைட்டமின் C சத்து, மூட்டுகள் தேய்மானம் அடைவதைத் தள்ளிப்போடும். எனவே C சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சைப்பழம், காலிஃபிளவர், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை அதிகம் அன்றாட உணவில் சேர்க்கவும்.
தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்
புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள், தக்காளிப்பழம், பால், மாமிசம் – ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற கொழுப்பு பொருட்களைத் தவிர்க்கவும்.
பழங்கள்
சாப்பிட வேண்டிய பழங்கள் – தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்.
காய்கறிகள்
ஏற்கனவே கூறிய வெண்டைக்காய், கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ்.
கீரைகள்
பிரண்டை, முடக்கத்தான் கீரை.
இத்துடன் கால்பாதக் குளியல் செய்யவும்.
கால்பாதக் குளியல் செய்முறை
- ஒரு பிளாஸ்டிக் டப்பில் இலேசான சூடு வென்னீர் அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு போட்டு கரைக்கவும்.
- அந்த டப்பில் உங்கள் இரு பாதங்களையும் வைத்து அமைதியாக 10 நிமிடங்கள் இருக்கவும்.
- பின் கால்களை வெளியில் எடுத்து அந்த தண்ணீரை செடியில் படாமல் கொட்டிவிட்டு கால் பாதத்தை துணியால் மெதுவாகத் துடைக்கவும்.
- இதை வாரம் மூன்று முறை செய்யவும்.
இந்த கால் பாதக்குளியல், பாதங்களில், விரல்களில், நகத்தினுள் உள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள், கிருமிகளை அழித்துவிடும். உடலில் கால் பகுதியில் உள்ள உஷ்ணம் நீங்கிவிடும். கால் பாதவலி, கணுக்கால் வலி, மூட்டுவலிகள் படிப்படியாக குறைந்துவிடும்.
எளிமையான பிராணசக்தி பெறும் தியான முறை
- ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கால்களை தொங்கவிட்டு அமரவும்.
- உங்கள் இரு உள்ளங்கைகளை, இரு கால் முட்டிமேல் வைத்துக் கொள்ளுங்கள்.
- கண்களை மூடி இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- அப்படி மூச்சை வெளியிடும் பொழுது உங்கள் உள்ளங்கை மூலமாக பிராணசக்தி இரண்டு மூட்டுக்குள்ளும் பரவுவதாக எண்ணுங்கள். மூட்டின் உள் பகுதி நன்கு வலுப்பெறுகின்றது. அதில் வெப்ப ஓட்டம், மூச்சோட்டம், இரத்த ஓட்டம் நன்றாக இயங்குகின்றது என்று எண்ணுங்கள்.
- இதுபோல் 10 தடவைகள் செய்யவும்.
நமது உள்ளங்கை மூலம், நம் உடம்பிலுள்ள பிராணசக்தி நன்றாக மூட்டினுள் பாய்ந்து, அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். நம் கையே நமக்குதவி, ஆரோக்கியம் நம் கையில் என்பது இதுதான். ஆம் நம்பிக்கையுடன் மேற்குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளை தினமும் காலை / மாலை பயிற்சி செய்யுங்கள். உணவில் மாற்றம் செய்யுங்கள். மூட்டுவலி முணங்கிக் கொண்டே உங்கள் உடலைவிட்டு ஓடிவிடும். அனைவரும் பயிலுங்கள். மூட்டுவலி இல்லாதவர்களும் பயிலுங்கள். எவ்வளவு வயதானாலும் மூட்டுவலி வராது.