நலம் தரும் நாற்காலி யோகா
வயசானாலும் விழாத உறுதியான பல் வேணுமா? சீத்காரி மூச்சுப்பயிற்சி
மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவைதான்! அந்த உறுப்புகளில் ஏதாவது ஒரு குறை ஏற்படும் பொழுது தான் அதனுடைய முக்கியத்துவம் நமக்குத் தெரியும். அந்த வகையில் நமது பற்களின் முக்கியத்துவம் பற்றியும் அதை இழக்கும் வரையில் நமக்குத் தெரிவதில்லை. உணவு உண்டால்தான் உயிர் வாழ முடியும். அந்த உணவை நமது வாயிலுள்ள பற்களின் உதவியால் மட்டுமே உண்ண முடியும். பற்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் உணவு உண்பது சாத்தியமாகும். ஒருவேளை, பற்களில் வலி ஏற்பட்டாலோ அல்லது ஈறு வீங்கினாலோ நம்மால் சரியாக மென்று சாப்பிட முடியாது.
‘எந்த வலியையும் தாங்கிக்கலாம். ஆனா, பல்வலி வந்தா மட்டும் பாடாய்படுத்திடும்’ என்பார்கள் சிலர். உண்மைதான்! பல்லைப் பிடுங்கும் போது ஏற்படும் அந்த வலியில்தான் தெரியும். நம் பற்கள், நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவை என்று!
ஆம், நமது பற்களின் இணைப்பு மண்டலமானது நமது தலை, மூளை, இதயம் உள்ளிட்ட எல்லா உறுப்புகளோடும் உள்ளது!
பற்களில் என்னென்ன பிரச்சனைகள் வரும்?
- பற்களின் இடுக்கில் ரத்தம் வருதல்.
- ஈறுகளில் ரத்தம் வருவது. ஈறு வீங்கிப் போவது.
- பற்களில் சொத்தை ஏற்படுவது.
- பல்வலி ஏற்பட்டு, துர்நாற்றமெடுப்பது.
- பல் பாதி உடைந்து பாதி உடையாமல் இருக்கும். அதனால் வலி ஏற்படும்.
- பல் கூச்சம் அதிகமாக இருப்பது.
- பற்களில் கறை ஏற்படுவது.
- பற்கள் விரிவடையும். இதன் இடுக்கில் உணவு சென்று, ஒரு வித வலியை ஏற்படுத்தும்.
- பற்கள் பலமிழந்தால் இளம் வயதிலேயே விழ ஆரம்பித்து விடும்.
இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட, இதோ நாற்காலியில் அமர்ந்து செய்யும் எளிய மூச்சுப்பயிற்சி! இதனை காலையும், மாலையும் இரண்டு நிமிடம் பயிற்சி செய்யுங்கள். மிக அழகாக வலுவாக உங்கள் பற்கள் மாறும்!!
சீத்காரி மூச்சுப்பயிற்சி செய்முறை:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காருங்கள்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி, இயல்பாக நடக்கும் மூச்சை 20 விநாடி கூர்ந்து கவனிக்கவும்.
- பிறகு மேல் தாடை, கீழ் தாடை பற்களை சேர்த்து வைத்து, பற்களின் இடுக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.
- உடனே வாயை மூடி, இரு நாசிகளின் (மூக்கின்) வழியாக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- இதே போல் மீண்டும் இரு தாடை பற்களையும் சேர்த்து, உதட்டை லேசாகத் திறந்து, பற்களின் இடுக்கு வழியாக சத்தமாக மூச்சை உள்ளே இழுக்கவும்.
- உடனே வாயை மூடி, இரண்டு நாசிகளின் வழியே மூச்சை வெளியே விடவும்.
- இதுபோல 10 முதல் 20 முறை பொறுமையாக பயிற்சி செய்யவும்.
அடுத்த பயிற்சி…..
- இடது கையை நேராக வைக்கவும்.
- இடது கை சுண்டுவிரல் நுனியை வலது கை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் பிடித்து லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
- இதே போல் ஐந்து விரல்களின் நுனிகளிலும் அழுத்தம் கொடுக்கவும். (படத்தை பார்க்கவும்).
- பிறகு கையை மாற்றி, வலது கையின் ஐந்து விரல்களின் நுனியிலும் இடது கைவிரல்களால் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
- இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யவும். பொறுமையாக ஒவ்வொரு விரல் நுனியிலும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும்.
- பிறகு இந்த அழுத்தத்தை ஒவ்வொரு விரலிலும் மேலிருந்து கீழ்வரை (விரல் முடியும் பகுதி வரை) லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
இந்த இரண்டு பயிற்சிகளும் நமது பற்களை திடப்படுத்துகின்றன. தவிர, கீழ்க்காணும் முறைகளையும் வாழ்வில் கடைப்பிடியுங்கள். எவ்வளவு வயதானாலும் உங்கள் பற்கள் மிக உறுதியக இருக்கும்.
பல்லுக்கு முக்கியம்!
- காலை எழுந்ததும், பேஸ்ட், பிரஷ் பயன்படுத்தாமல் சாம்பல் வைத்து கையினால் விரல்கள் மூலம் பல் தேய்க்கவும். இதுதான் பற்களை திடப்படுத்தும்.
- இரவு படுப்பதற்கு முன்பு ஒருமுறை கைவிரல்களினால் சாம்பல் / பல்பொடியினால் பல் தேய்க்கவும்.
- ஒருநாள் விட்டு ஒருநாள் சுத்தமான நல்லெண்ணெயை இரு கரண்டி அளவு எடுத்து வாயில் விட்டு, நன்றாக கொப்பளித்து துப்பவும்.
- வாரம் ஒரு முறை கல் உப்பு ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளரில் போட்டு சுட வைத்து, லேசான சூட்டில் வாயில் ஊற்றி, நன்றாகக் கொப்பளித்து துப்பவும்.
- வாரம் ஒரு முறை ஆலங்குச்சியை ஒடித்து, அதன் நுனியை பல்லினால் கடித்து, அதனை வைத்து பல் தேய்க்கவும். அதேபோல், வேப்பங்குச்சியையும் உடைத்து வாரம் ஒரு நாள் பல் தேய்க்கவும்.
- பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து, அதை வாயில் போட்டு, நன்றாக மெல்லுங்கள். பிறகு அந்தச் சாறானது பற்களின் இடுக்குகளில் படும்படி சுவைத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்கவும்.
உணவு முறை எப்படி?
- புதினாவை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
- வெள்ளரிக்காயை நன்கு மென்று சாப்பிடுங்கள்.
- கொய்யாப்பழத்தைக் கடித்து, மென்று சாப்பிடுங்கள்.
- மாதம் ஒருமுறை ஒரு துண்டு கரும்பைக் கடித்து, நன்றாக மென்று சாறை குடியுங்கள்.
- துளசி இலையை வாரம் இருமுறை வாயில் போட்டு, நன்றாக மென்று சாப்பிடவும்.
இந்த எளிய பயிற்சியை தினமும் 5 நிமிடம் செய்து, இந்த உணவுமுறையையும், பல் துலக்கும் முறையையும் கடைப்பிடித்து வாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்நாள் முழுவதும் பல்வலி, ஈறுவலி, ஈறுவீக்கம், ரத்தக்கழிவு இல்லாமல் வாழலாம்!!