வாழ்வாங்கு வாழ வைக்கும் ‘வந்தனம்’
ஆரோக்கியம் நம் கையில் – 17
நீரிழிவிற்கு ஒரு கும்பிடு. அழுத்தத்திற்கு ஒரு கும்பிடு. கால் வலிக்கு ஒரு கும்பிடு. நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு கும்பிடு. கழுத்து வலிக்கு ஒரு கும்பிடு. முதுகு வலிக்கு ஒரு கும்பிடு. இப்படி எல்லா வியாதியும் உடலில் வராமல் இருக்க ஒரே ஒரு கும்பிடு. புரியவில்லையா சார்! வந்தனம் என்ற இந்த கும்பிடு ஆசனத்தை செய்யுங்கள்! எல்லா வியாதியும் கும்பிடு போட்டு ஓடிவிடும். ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் வந்தனம் என்று சொல்லி உங்கள் உடம்பிற்குள் வந்துவிடும். அப்புறமென்ன வந்தனத்தை பயில வாருங்கள்.
வந்தனம் ஆசனம் செய்முறை:
- விரிப்பில் நேராக நிற்கவும்.
- இரு கால்களையும் நிதானமாக முடிந்த அளவு அகற்றவும்.
- இருகால் பாதங்களும் படத்தில் உள்ளது போல் இருக்க வேண்டும்.
- இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.
- இந்நிலையில் ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து வெளிவிடவும்.
- ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும்.
- பின் மெதுவாக கைகளை கீழிறக்கி கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
- இதே போல் மூன்று முறைகள் செய்யவும்.
வந்தனம் ஆசனத்தின் பலன்கள்
இந்த வந்தனம் ஒன்று போதுமே! உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். 72,000 ம் நாடி நரம்புகளுக்கும் ஒரே நேரத்தில் பிராண சக்தி கிடைக்கும். தசைகள் தொய்வில்லாமல் இளமையுடன் அழகாக தோற்றமளிக்கும்.
உடல் எடை அதிகமாகாமல் ஒரே சீராக அழகாக இருக்கும்.
கால் தொடை தசைகள் சிக்கென இருக்கும். தொடையில் உள்ள அதிக தசைகள் நீங்கி மிக அழகாக இருக்கும்.
கணுக்கால் வலி நீங்கும். கால் பாதவலி நீங்கும். உள்ளங்கால் வலி நீங்கும்.
ஆண்களுக்கு மார்புப் பகுதியில் ஏற்படும் கூன், சுருக்கம் நீங்கி ஆண்மை அழகு மிளிரும்.
பெண்கள் இந்த ஆசனம் செய்தால் மிக இளமையுடன் அழகுடன் திகழலாம். பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி நீங்கும்.
மூலம் நீங்கும். ஆசனவாயில் அரிப்பு, புண் நீங்கும். ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும்.
தூக்கத்தில் கணுக்கால் தசை மேல் ஏறி வலிக்கும். இந்த ஆசனம் அதனை அறவே நீக்கி கால் தசை, நரம்புகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கின்றது.
பஞ்ச பூத சமநிலை
உடலில் பஞ்ச பூதங்களும் சமமாக இயங்க பயன்படும். பஞ்ச பூதத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால் அதனை சரிப்படுத்தும்.
சுறுசுறுப்பும், உற்சாகமும் உடலுக்கு கிடைக்கும். உடல் சோர்வடையாமல் பல மணிநேரம் வேலை செய்யலாம்.
இந்த வந்தனம் யோகாவில் மூச்சை இழுத்து மெதுவாக வெளியிடும் பொழுது நுரையீரல் பலவீனம் நீங்கி நன்கு சக்தி பெறும். நுரையீரல் சிறப்பாக இயங்குவதால் சளி, ஆஸ்துமா, சைனஸ் வராது.
மன அழுத்தம் நீங்கும் வந்தனம்
மன அழுத்தம், கவலை தான் எல்லா வியாதிக்கும் மூல காரணம். இதனால் சோக உணர்வுகள் உடலில் படர்கின்றது. இந்த ஆசனம் செய்யும் பொழுது மன அழுத்தம், கவலை நீங்கும். உடலில் உள்ள தமோ குணம் (சோம்பல்) நீங்கி, புத்துணர்ச்சியடையலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தைமஸ் சுரப்பி, இருதயம் மீண்டும் புத்துயிர் பெற்று சிறப்பாகயிருக்கும்.
மன அழுத்தம் நீங்குவதோடு மட்டுமல்ல, மனம் ஒருமைப்படும். பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் சிறப்பாக இயங்கும். அதனால் எண்ணச் சிதறல்கள் இருக்காது. குறிப்பாக மாணவர்கள் இதனை பயின்றால் ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெரிய பெரிய இயந்திரத்தை இயக்குபவர்கள் நல்ல மன ஒருநிலைப்பாட்டுடன் செயல்படுவதால் விபத்து தவிர்க்கப்படும். வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.
பஸ் ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் பயின்றால் விபத்து தவிர்க்கலாம். காரணம் எண்ணச் சிதறல்கள் இல்லாமல் வாகனத்தை முழுக்கவனத்துடன் ஓட்ட முடியும்.
இந்த ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கி ஒரு டம்ளர் நீர் அருந்திவிட்டு ஐந்து நிமிடம் நிதானமாக செய்ய வேண்டும். அதன் மூலம் உடல் மனபலம் பெற்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
2020 புது வருடத்தில் மன அமைதியுடன் மன அழுத்தம் இல்லாமல் வாழ இதோ ஒரு எளிய முத்திரை “தியான முத்திரை”.
எல்லா உடல், மன நோய்களுக்கு காரணமாக அமைவது மன அழுத்தம், மனக்கவலை தான். மன அழுத்தத்தினால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல் பலவித நோய்கள் வருகின்றது. மனதில் அழுத்தம் இல்லாமல் கவலையில்லாமல் இருந்தால் தான் நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும்.
மனதில் அமைதியைத் தருவது நம் கைகளிலேயே இருக்கின்றது. ஆம் அதுதான் முத்திரையாகும். பலவிதமான முத்திரைகள் உள்ளன. அதில் மன அமைதியைத் தரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் முத்திரை தான் தியான முத்திரையாகும்.
இன்றைய பரபரப்பான சூழலில் பதட்டம், டென்ஷன் இல்லாமல் முழுக்க முழுக்க வாழ முடியாது. டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு இந்த முத்திரை செய்தவுடன் சரியாகிவிடும்.
தியான முத்திரை எப்படி செய்வது
- விரிப்பில் நேராக அமரவும். வயதானவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம்.
- மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறை இவ்வாறு செய்யவும்.
- பின் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைத்து இரண்டு கட்டை விரல் நுனியும் தொட்டுக் கொண்டிருக்கட்டும் (படத்தை பார்க்க).
- பின் மெதுவாக கண்களை திறக்கவும்.
- காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். சாப்பிட்டு இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து செய்யவும்.
நமது இரு கட்டைவிரலும் நெருப்பு மூலகம், நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. மனக்கவலை, பதட்டம், டென்ஷனால் உடலில் உஷ்ணம் அதிகமாகின்றது. அந்த உஷ்ணத்தை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது. உடல் மனதில் ஒரு அமைதியை தருகின்றது.
தியான முத்திரையின் இதர பலன்கள்
மன அழுத்தம் நீங்கும். மனக்கவலை நீங்கும். ரத்த அழுத்தம் நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது. சுறுசுறுப்புடன் திகழலாம். பய உணர்வு நீங்கும். தன்னம்பிக்கை பிறக்கும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஒற்றைத் தலைவலி நீங்கும்.
இவ்வாறு பலன்கள் தரும் இந்த முத்திரையை இந்த 2020 ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தினமும் பயிற்சி செய்யுங்கள். அதேபோல் வந்தனம் என்ற யோகாசனத்தையும் பயிலுங்கள்.