வெற்றி வேண்டுமா? செய்து வாருங்கள் – பர்வதாசனம்
மலைப்பிரதேசம் என்றாலே நமக்கெல்லாம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் கரணம் இயற்கை எழிலுடன் பலவிதமான மரங்கள் மூலிகை செடியுடன் மிக உயர்ந்து வளைந்து அழகாக தோற்றமளிக்கும். மலை மீது ஏறினால் நல்ல காற்று வீசும். உள்ளமும் பேரமைதியும் ஆனந்தமும் அடையும். மலையேறினால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வையாக வெளியேறும். மூட்டுகள் பலம்பெறும். ராஜ உறுப்புகளான இதயம் நுரையீரல் உள்ளிட்டவை பாதுகாக்கப்படும். பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம். பர்வதாசனம் என்பது மலைபோல் திடமான உடலையும் மன உறுதியையும், வளமான நலமான எண்ணத்தையும் தரவல்லது.
இன்றைய மனிதர்கள் நிலை
இன்று நம்மில் பலருக்கும், குறிப்பாக வளரும் வயதில் உள்ள மாணவ செல்வங்களுக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் வாழ்வில் இல்லை. ஒன்று – திடமான மனது. மற்றொன்று – திடமான உடல்.
காரணம், மனதில் பலவித சஞ்சலங்கள் குழப்பங்கள். அதனால் எண்ணத்தில் தெளிவு இல்லை. சிந்தனை தெளிவு இல்லை. சொல் தெளிவு இல்லை. செயலும் தெளிவு இல்லை. அதனால் உடலிலும் திடம் இல்லை. இந்த இரண்டும் தான் ஒரு மனிதனின் முதல் அடிப்படை தேவையாகும். இவற்றை அடைய ஒரே வழி யோகாதான்!
யோகக்கலை மனிதனின் மனதில் உள்ள மாசுகளை அகற்றி தெளிந்த சிந்தனையை கொடுக்கிறது. உடல் உள்ளுறுப்புகளில் உள்ள அசுத்தங்களை நீக்கி உடலை திடமாக இயங்கச் செய்கிறது. உடலும் மனமும் திடமாக நலமாக வளமாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் வசந்த காலம் தான் நமக்கு!
பர்வதாசனம் செய்முறை:
விரிப்பில் அமர்ந்து முதலில் பத்மாசனம் போடவும்.
இரு கைகளையும் முன்புறம் தரையில் ஊன்றி எழுந்து, முழங்கால்களின் முஷ்டியை தரையில் ஊன்றி, கைகள் இரண்டையும் மேல உயர்த்தவும்.
இப்படி உயர்த்தியபடி இரு முழங்கால் மூட்டில் பத்து முதல் இருபது வினாடிகள் நிற்கவும்.
பிறகு மெதுவாக விரிப்பில் அமர்ந்து, பத்மாசனத்திலிருந்து கால்களை விடுவித்து சாதாரணமாக அமரவும்.
மேற்சொன்ன முறையில் இரண்டு முறை பர்வதாசனம் செய்யவும்.
முக்கிய குறிப்பு:
மூட்டு வலி அதிகமுள்ளவர்கள், மூட்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம். மற்றவர்கள் முதலில் பயிற்சி செய்யும்போது சுவர் ஓரத்தில் அமர்ந்து பத்மாசனமிட்டு மெதுவாக சுவரில் சாய்ந்து பயிற்சி செய்யவும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் பயிற்சி செய்ததும் சுவரில் சாயாமல் பயிற்சி செய்யலாம். அவசரப்படாமல் ரொம்பவே நிதானமாக பயில வேண்டும். படிக்கும் இளம் மாணவ செல்வங்கள் எளிதாக இதனை பழகிவிடலாம். மாணவ பருவத்திலேயே திடமான மனமும் உடலும் பெற்று விடலாம்.
பலன்கள்:
உடல் உறுதியாகும்.
மன உறுதி ஏற்படும்.
மூட்டு வலி வராது.
ஆஸ்துமா சைனஸ் ஒழியும்.
முதுகுஎலும்பு உறுதியாகும்.
பெண்களுக்கு தனி அழகு தரும்.
கழுத்து வலி நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
வாயு கோளாறு நீங்கும்.
நோய் எதிர்ப்பு திறன் கூடும்.
சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
உணவில் கவனம் தேவை:
இந்த ஆசனம் செய்வதுடன் உணவில் சற்று கவனம் செலுத்தினால் இன்னும் நலமாக வாழலாம். பொன்னாங்கண்ணி கீரை, அகத்தி கீரை வாரம் இருமுறை உணவில் சேர்க்கவும். பதினைந்து நாட்கள் ஒரு முறை காலையில் மகா வில்வம் இலை ஐந்து சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும். ரோஜா இதழை சுத்தமான தேனில் ஊறவைத்து ஒரு ஸ்பூன் விகிதம் வாரம் இருமுறை சாப்பிடவும். கண்டங்கத்திரியை மாதம் இருமுறை உணவில் சேர்க்கவும். முருங்கைக்காய் மற்றும் வேப்பம்பூ உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.
பர்வதாசனம் செய்வதோடு மேலே குறிப்பிட்ட உணவுகளையும் எடுத்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணம் ஆரோக்கியம் வாழ்வு உள்ளிட்டவை மலை போல் உயரும்!