26
May
ஜானுசீராசனம் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அசனம் பாதி (உணவு பாதி) ஆசனம் பாதி என்பது பழமொழி. அதனால், ஆசனத்துடன் உணவிலும் நாம் கவனம் செலுத்தினால் மிக விரைவில் பலன் உண்டு. சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் கரைய கீழ்கண்ட உணவுகளை ஆசனத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்.
உண்ண வேண்டிய கீரைகள்
முளைக்கீரை, சாட்டரணை, யானை நெருஞ்சி, சிறு நெருஞ்சி, கூடவே வாழைத்தண்டு.
குறிப்பு:
வாழைத்தண்டு நல்லதுதான். ஆனால் பலர் தினமும் வாழைத்தண்டு சாறு சாப்பிடுகிறார்கள். அது தவறு. உடலில் உள்ள உயிர்சக்தியை உறிஞ்சிவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை வாழைத்தண்டு பொரியல் செய்து மருந்தாக ஒரு கரண்டி சாப்பிடவும். பலன் உண்டு. மற்றபடி மேலே சொன்ன கீரைகளை நீங்கள் வாரம் இருமுறை தாரளமாக சாப்பிடலாம்.
காய்கறிகள்
பூசணிக்காய், நூக்கல், வெள்ளை முள்ளங்கி, கோவைக்காய்.
பழங்கள்
ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாசிப்பழம், மாதுளம்பழம், ஆரஞ்சு, கொய்யா ஆகியவற்றை நன்கு மென்று சாப்பிடவும். கூடவே கரும்புச்சாறு குடிக்க மறக்காதீர்கள்.
கரிசலாங்கண்ணி கீரை
கரிசலாங்கண்ணி கீரையை பச்சையாகவோ, சமையல் செய்தோ, தினம் தினம் உட்கொண்டால், பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள் ஒரு கட்டத்தில் கரைந்து மறைந்தேவிடும்.
இந்த கீரையின் மகிமையை வள்ளலார் திருவருட்பா வசன பாகத்தில், கரிசாலையும், தூதுவளையும் என்ற தலைப்பில் அருமையாக விளக்கியுள்ளார்.
அதாவது, கரிசலாங்கண்ணி கீரையை தினம் உட்கொண்டால் ஆயுள் நீடிக்கும். பித்தப்பையில், சிறுநீரகத்தில் உருவாகியுள்ள கற்களை அகற்றி பித்தப்பை, சிறுநீரகப்பையை சிறப்பாக இயங்கச் செய்யும்.
கரிசலாங்கண்ணி கீரையில் உள்ள பழுப்பு இலைகளை நீக்கி, நீரில் கழுவி வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்க்கவும். தவிர, வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய்த்தால், மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அந்நேரமே வெளியாகும்.
பித்தப்பை கெட்டுப்போய், அதில் கற்களும் இருந்தால், அந்நேரமே பித்தம் வெளியேறும். அதிலுள்ள கற்கள் வாந்தி மூலமோ, மலத்தின் மூலமோ வெளியேறும். சிறுநீரகம் சுத்தப்படும். சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால், அவை சிறுநீரில் கரைந்து வெளியேறும். இது முற்றிலும் உண்மை. இதனை உலகுக்கு தன் பாடல் மூலம் தந்தவர் வள்ளலார். ஆனால், உலகம் இதனை இன்னும் உணரவில்லை. இன்று குமுதம் சிநேகிதி மூலம் வாசகர்கள் அனைவரும் இதன் மகிமையை உணர வாய்ப்பு வந்துள்ளது.
கரிசலாங்கண்ணி கீரையை உண்டால், கபநீர் வெளியேறுவதால் – சுவாசப்பையும், நுரையீரலும், பித்தநீர் வெளியேறுவதால் – கல்லீரலும் பித்தப்பையும், மலம் வெளியேறுவதால் – பெருங்குடலும், நீர் பிரிவதால் சிறுநீர்ப்பையும் சுத்தமடைகின்றன.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் புளிப்புத்தன்மையை விட காரத்தன்மை பொருந்திய தாதுப்பொருட்கள் அதிகமுண்டு. குறிப்பாக, பொட்டாசியம் அதிகமுண்டு. மூத்திரக்காய் (சிறுநீரகம்) நன்றாக இயங்க வெள்ளரிக்காய் உதவும். நீர் நன்றாக குடித்தால் சிறுநீர்ப்பையில் கற்கள் சேராது. சேர்ந்தாலும் சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.
சிவப்பு குடைமிளகாய்
குடமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும் வைட்டமின் சி, ஏ, பி மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள். சிறுநீர்க் கற்கள் வராமல் தடுக்கும்.
முட்டைகோஸ்
முட்டைகோஸில் வைட்டமின் ‘கே’ வைட்டமின் ‘சி’, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது, சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பையைச் சுத்தப்படுத்தும். எனவே, முட்டைகோஸை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவில் சேருங்கள் சிறுநீர்ப்பையிலுள்ள கற்கள் கரையும். சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
பூண்டு
பூண்டை, குழம்பாகவோ பூண்டு தோசையாகவோ அல்லது வெறுமனே எண்ணெயில் வதக்கியோ சாப்பிடலாம். சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள், கற்கள் இரண்டையும் வெளியேற்றும் சக்தி பூண்டுக்கு உண்டு.
வெங்காயம்
பொட்டாசியம் குறைவாகவும், குரோமியம் அதிகமாகவும் வெங்காயத்தில் உள்ளது. இதனால் வெங்காயம் சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் நன்கு இயங்கும். சிறுநீரகக்கற்கள், நச்சுப் பொருட்கள் வெளியேறும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் நம் பாட்டிகளின் ஹெல்த் சீக்ரெட் இப்போது தெரிகிறதா?
பீட்ரூட்
இதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றும்.
கத்தரிக்காய்
எங்கும் கிடைக்கும் எளிய காய் இது. தினமும் இதை உணவில் சேருங்கள். சிறுநீரகப்பை நன்றாக சிறப்பாக இயங்கும்.
பேரிக்காய்
சிறுநீரகம், சிறுநீரகப் பையில் உள்ள நச்சு பொருட்களை அகற்றும் தன்மை கொண்டது பேரிக்காய். இதை வாரம் இருமுறை சாப்பிடலாம்.
தண்ணீர்
சிறுநீரகம், பித்தப்பையின் கழிவுகளை வெளியேற்ற உடல் தாகமாக தண்ணீர் கேட்கும். ஆனால், நாம் அந்த உடல் மொழியை அலட்சியப் படுத்துகிறோம். இது தவறு. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடியுங்கள். பித்தப்பை, சிறுநீரகப்பை சிறப்பாக இயங்கும்.
காபி
அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் நச்சுத் தன்மை உருவாகும். பின் அது கற்களாக மாறும். எனவே காபி குடிப்பதற்கு பதில் இஞ்சி டீ குடியுங்கள். பித்தப்பை சுத்தமாகும்.
உங்கள் உடல் நலனுக்காக கொஞ்சம் அக்கறை எடுத்து, மேலே குறிப்பிட்ட உணவுகளை உண்ணுங்கள் அத்துடன் ஜானுசீராசனத்தையும் செய்யுங்கள் பித்தப்பை, சிறுநீரகத்தில் கற்கள் என்ற பேச்சுக்கே இனி இடமிருக்காது.