நலம் தரும் நாற்காலி யோகா
உட்கார்ந்தபடியே உடல் எடை குறைக்கலாம்
தமிழில் ஒரு பழமொழி உண்டு, “தொந்தி வியாதிக்குத் தந்தி” என்று. நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ உடலில் தொப்பை வந்துவிடுகிறது. இதனை குறைக்க வழி தெரியாமல் பலர் விழிப்பதுண்டு. கவலை வேண்டாம்.
முதலில் உடல் எடை அதிகரித்ததன் காரணத்தை அறிய வேண்டும். பின், அது சரியாக என்ன வழி என்பதை உணர்ந்து அதன்படி நடந்தால் போதும்.
பொதுவாக உடல் எடை கூட காரணங்கள்:
- பசிக்காமல் உணவு உண்பது, பசிக்கும் பொழுது உணவு உண்ணாமல் இருப்பது.
- உணவில் அதிக காரம், உப்பு, புளிப்பு சேர்த்துக் கொள்வது.
- இரவு 8 மணிக்கு மேல் உண்பது. அதிகமாக உண்பது. மைதாவினால் ஆன பண்டங்கள் உண்பது.
- பகலில் சாப்பிட்டவுடன் உறங்குவது.
- எண்ணெய் தேய்த்துக் குளிக்காமலிருப்பது.
- பகலில் கணவன், மனைவி இணைவது.
- இரவு அதிக நேரம் கண்விழிப்பது.
- உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யாமலிருப்பது.
- பசி அடங்கிய பிறகும் ருசிக்காக அதிகம் சாப்பிடுவது.
- மாமிசம் அதிகமாக உண்ணுவது.
இவையெல்லாம் முக்கியமான காரணங்கள். இதில் உங்களுக்கு என்ன குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, பிறகு அதனை சரிசெய்ய முதலில் முயற்சிக்கலாம்.
பொதுவாக, பலரும் உடல் எடை உடனே குறைய வேண்டும் என்பதற்காக, மாத்திரைகள் சாப்பிட்டு ஒரே மாதத்தில் உடல் எடை 10 கிலோ குறைந்து விடுகின்றனர். உடலில் திடீரென்று உடல் எடை குறைந்தால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். இதனைத் தவிர்த்து எந்த ஒரு பக்க விளைவும் இன்றி, உடல் அதிக எடையை யோக முத்திரை நெறிப்படி குறைக்கலாம்.
சூரிய முத்திரை
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
- கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சோட்டத்தை இருபது விநாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.
- பின், மோதிர விரலை மடக்கி உள்ளங்கை மத்தியில் படும்படி வைத்து அதன் நடுவில் கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- இரு கைகளிலும், இரண்டு நிமிடம் பயிற்சி செய்யவும்.
- பின், மெதுவாக கண்களை திறக்கவும்.
- இதே போல் காலை / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
பலன்கள்:
- நமது உடல் பஞ்ச பூதத்தின் தன்மைகளாலானது. இதன் கட்டுப்பாடு கை விரல்களில் உள்ளது. இந்த முத்திரையில் நிலம் மூலகத்தையும், நெருப்பு மூலகத்தையும் இணைக்கிறோம்.
- இதனால், சிறுகுடல், பெருங்குடலில் உள்ள அதிக கொழுப்புகள் கரைகின்றது.
- உடலில் எந்தப் பகுதியில் கொழுப்பு சதைகள், கட்டிகள் இருந்தாலும் அதனை கரைத்துவிடும்.
- அவரவர்கள் வயதிற்கேற்ப உடலில் எந்த அளவு சதை இருக்க வேண்டுமோ அதனை இருக்கச் செய்யும் அற்புத முத்திரையாகும்.
தசைகளைக் குறைக்கும் எளிய பயிற்சி (ஜானுசீராசன நிலை)
- நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.
- இரு கால்களையும் நன்கு இரு பக்கம் முடிந்த அளவு அகற்றவும் (படத்தைப் பார்க்கவும்).
- மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மெதுவாக குனிந்து தலையை முட்டியால் தொடவும்.
- சாதாரண மூச்சில் பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின், மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே மேலே வரவும்.
- இதே போல் அடுத்த பக்கத்திலும் செய்யவும்.
- ஒவ்வொரு காலிலும், மூன்று முறைகள் பயிற்சி செய்யவும்.
யோக முத்ரா நிலை:
- நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவும்.
- இரு கால்களையும் பக்கவாட்டில் நன்கு அகற்றவும்.
- கைகளை முதுகுக்கு பின்னால் கட்டவும்.
- மெதுவாக மூச்சை வெளிவிட்டு கீழே நேராக குனியவும்.
- பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும்.
- பின் மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே நிமிரவும்.
- இதே போல் மூன்று முறைகள் செய்யவும்.
இந்தப் பயிற்சிகளை தினம் காலை / மாலை இரண்டு வேளையும் செய்யவும். மிக நல்ல பலன் கிடைக்கும். இத்துடன் உணவில், ஒரு ஒழுக்கத்தையும் கடைபிடியுங்கள். அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள்.
முக்கிய உணவுகள்:
- வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சுரைக்காய் / பூசணிக்காய் உணவில் சேர்க்கவும்.
- கொய்யாப்பழம் அடிக்கடி சாப்பிடவும்.
- மாதுளம் பழம் வாரம் ஒரு நாள் எடுக்கவும்.
- கிழங்கு வகைகளை குறைத்து கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
- புதினா துவையல், கொத்தமல்லி துவையல் சாப்பிடலாம்.
- சுக்கு, கருப்பட்டி காபி இரவில் அருந்தலாம்.
இதர பலன்கள்:
- இந்த பயிற்சிகள் எல்லாம் உடல் எடை குறைப்பதற்கான பயிற்சிகள்.
- இதனால் உடல் எடை சீராகக் குறைந்து, இதயம் பாதுகாக்கப்படும்.
- நுரையீரல், மூட்டுகள் நன்கு இயங்கும்.
- கழுத்துவலி, பாத வலி வராது.
- உடலில் இரத்த ஓட்டம், சுவாசம் சீராக இருக்கும்.
- உடலில் குறிப்பாக மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல் கழிவுகள் தங்காது.
- கல்லீரல், மண்ணீரல் நன்கு இயங்கும்.
பொதுவாகவே உடல் எடை சரியாக இருந்தால்தான் நம்மால் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் செயல்படமுடியும்.
நம் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல், மற்ற பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறது இந்த பயிற்சிகள். சற்று பொறுமையோடு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் வளையும் தன்மை பெற்று, எடை குறைந்து ஆரோக்கியம் காக்கப்படும்.